முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி வழக்கில் இந்த வாரம் குற்றப்பத்திரிக்கை

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,மார்ச்.29 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் சி.பி.ஐ. இந்த வாரம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறது. 

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் தலைமை நிர்வாக அதிகாரி உஸ்மான் பல்வா, தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகூரா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிக்கையை இம்மாதம் 31 ம் தேதிக்குள் தாக்கல் செய்வோம் என சி.பி.ஐ சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி இந்த வாரத்தில் குற்றுப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த குற்றப்பத்திரிக்கையில் 2007 -08 ஆண்டு நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் பின்னணியில் நடந்த குற்ற சதிகள் பற்றிய விவரங்கள் இடம் பெற்று இருக்கும் எனத் தெரிகிறது. 

டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஷைனி முன்பு இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். செவ்வாய்க்கிழமை முதல் இதன் மீது விசாரணை நடக்கும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராசா உள்ளிட்ட நால்வரின் பெயர் இந்த குற்றப்பத்திரிக்கையில் இருக்கும் என்று ஏற்கனவே சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது. மேலும் ஒரு எம்.பியின் பெயரும், அதில் இடம் பெற்றிருப்பதாக இப்போது தெரியவந்திருக்கிறது. 

எனினும் எவ்வளவு நிதியிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை பற்றிய தகவல் இந்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றிருக்காது. டிராய் அமைப்புடன் கலந்தாலோசித்த பிறகு இது பற்றி இறுதி செய்யப்படும் என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ கூறும் என்று தெரிகிறது. எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை டிராய் அமைப்பு இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. டிராய் அமைப்பின் முடிவுக்கு பிறகே அது பற்றிய தகவல் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறும். முன்னதாக ரூ 32 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அரசிடம் சி.பி.ஐ. தெரிவித்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்