முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாகிஸ்தான் உள்துறை செயலாளர்கள் பேச்சுவார்த்தை துவக்கம்

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 29 - இந்தியா - பாகிஸ்தான் உள் துறை செயலாளர்கள் மட்டத்திலான இரண்டு நாள் பேச்சுவார்த்தை நேற்று டெல்லியில் துவங்கியது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 9 மாதங்களாக தடைப்பட்டிருந்த  பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க இரு நாடுகளும் சம்மதித்தன.

வருகிற 30-ம் தேதி மொகாலியில் உலக கோப்பை கிரிக்கெட்டின் அரை இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோத உள்ளன. 

இந்த போட்டியைக் காண பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஜா கிலானி இந்தியா வர இருக்கிறார். 

இந்த நிலையில் இரு நாடுகளுக்கிடையேயான உள்துறை செயலாளர்கள் மட்டத்திலான இரண்டு நாள் பேச்சுவார்த்தை நேற்று டெல்லியில் துவங்கியது.

இந்திய உள்துறை செயலாளர் கோபால் கே. பிள்ளை, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்  சவுதாரி காமர் ஜமான் ஆகியோர் தங்களது பேச்சுவார்த்தையை துவக்கினர்.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு நாடு கடத்துவது, எல்லை தாண்டிய பயங்ரவாதம், மும்பை தாக்குதல் விசாரணை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கின்றன.

மும்பை தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஜாகியூர் ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய தீவிரவாத தலைவர்களின் குரல் மாதிரிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்தும் பேச்சு நடக்க இருக்கிறது.

மும்பை தாக்குதல் சம்பவம் தொர்பான வழக்கில் தற்போது பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாத தலைவர்களிடம் விசாரணை நடத்த கமிஷன் ஒன்றை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா முடிவு  செய்துள்ளது. இந்த கமிஷனை பாகிஸ்தான் அனுமதிப்பது குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் 17 அதிகாரிகளும் பாகிஸ்தான் சார்பில் 17 அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஷாகீத் மாலிக்கும் இந்த பேச்சில் பங்கேற்றுள்ளார்.

மொகாலியில் நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தை  பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியும் கூட்டாக அமர்ந்து பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரு நாட்டு பிரதமர்களின் இந்த மொகாலி சந்திப்பு  இரு நாட்டு உள்துறை செயலாளர்களின் சந்திப்பு ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையே நீடித்திருக்கும் பதட்டத்தை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்