முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மட்டுமே இயற்கை வளங்களை சுரண்டி விற்கும் கொடுமை

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,மார்ச்.29 - இயற்கை வளங்களை சுரண்டி விற்கும் கொடுமை தமிழகத்தில் மட்டுமே நடக்கிறது என்று இயக்குனர் சீமான் பேசினார். மதுரை, திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நாம் தமிழர் இயக்க நிறுவனரும், திரைப்பட இயக்குனருமான சீமான் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, 

தமிழகத்தில் 63 தொகுதிகளிலும் காங்கிரஸ் தோற்பது உறுதி. காங்கிரசின் கொள்கை என்ன? தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தனது மனைவியை தேர்தலில் நிறுத்துவதற்காக உரிய ஆவணங்களை சேர்க்கவில்லை. காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க நான் வெளியில் இருந்து போராடுகிறேன். ஆனால் அவர்களோடு கூட்டணி வைத்திருக்கும் பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் காங்கிரசை தோற்கடிக்க உள்ளேயிருந்து போராடுகின்றன. குறிப்பாக, தி.மு.க. வினர் காங்கிரசை தோற்கடிக்க வரிந்து கட்டி வேலை செய்கின்றனர். காங்கிரஸ் தேசிய கட்சி அல்ல. இந்தியாவிற்கு தேவையில்லாத கட்சி. அந்தந்த மாநிலங்களில் தனித்து நிற்காமல் மாநில கட்சிகளின் தோள்களில் சவாரி செய்கிறது. தமிழக மக்களுக்கு சேர வேண்டிய தண்ணீரை பெற்று தர காங்கிரஸ் குரல் கொடுக்கவில்லை. 

தமிழகத்தில் மணல் கொள்ளை போகிறது. கருணாநிதியிடம் கேட்டால் மணல்தானே என்கிறார். தற்போதைய தி.மு.க. ஆட்சியில் ஆறுகளையே தேட வேண்டிய நிலை உள்ளது. அது மட்டுமல்லாது, மலைப் பகுதிகளில் தரை மட்டத்தையும் தாண்டி நூற்றுக்கும் மேற்பட்ட அடி பள்ளங்களாக்கி மலைப் பாறைகளை வெட்டி எடுத்து கொள்ளயடித்து விட்டனர். இயற்கை வளங்களை சுரண்டி விற்கும் கொடுமை தமிழகத்தில் மட்டுமே நடக்கிறது. மணல் கொள்ளை, மலைகளை வெட்டி எடுத்து கொள்ளையிடுவதை தி.மு.க. அரசு தடுக்கவில்லை. காரணம், ஆட்சியாளர்களும், அவர்களது பினாமிகளும் தான் இதில் ஈடுபட்டுள்ளனர். மணல் கடத்தலை தடுக்க செல்பவர்கள் கொல்லப்படுகின்றனர். 

விலை உயர்வை கட்டுப்படுத்துவது அந்தந்த மாநில அரசுகளின் கடமை. கருணாநிதி கேட்டால் மத்திய அரசுதான் பொறுப்பு என்கிறார். இரு அரசுகளும் மக்களுக்கு தேவையில்லை. கொலை, கொள்ளை இவை அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டு விட்டது. மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுபவர்களை சிறையில் அடைக்கின்றனர். 

அனைத்து வகையிலும் எதிரும் புதிருமாக செயல்படும் நாடான பாகிஸ்தான் எல்லை தாண்டும் நமது மீனவர்களை சுடுவதில்லை. கேரள மீனவர்களை கூட இலங்கை கடற்படை சுடவில்லை. தமிழக மீனவர்களைத்தான் சுடுகிறது. தமிழக மீனவர்களுக்காக போராடும் என்னை தேச துரோகி என்கிறார் கருணாநிதி. ரூ. 1.76 லட்சம் கோடியை தாண்டி கொள்ளையடித்த கருணாநிதி யோக்கியரா? தமிழனின் வாழ்க்கை முக்கியமல்ல. வாக்குதான் முக்கியம். 

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஊழல் இல்லையென்றால் கருணாநிதி ஏன் போராடவில்லை. இதனால் இறந்தது என்னவோ சாதிக்பாட்சாதான். அதுவும் இறந்தது அவர் தானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதெல்லாம் தி.மு.க.வின் நாடகம்தான். 

தமிழக மக்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இல்லை. அடித்த கொள்ளை பணத்தை கொடுத்து ஓட்டுக்களை பெற நினைக்கிறார் கருணாநிதி. இரவு நேரங்களில் மின்வெட்டை ஏற்படுத்தி வீடுகளில் பணத்தை போடுகின்றனர். பணத்தை பெற்றுக் கொள்ளும் போது குல தெய்வம், குழந்தை, பால் ஆகியவற்றின் மீது சத்தியம் செய்து கொடுங்கள். நீங்கள் பெறுவது அவர்கள் உழைத்து சம்பாதித்த பணம் அல்ல. உங்களிடமிருந்து சுரண்டிய பணம்தான். ஊரை அடித்து உலையில் போட்ட பணம் அது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்