முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜுண்டாலை பற்றி அதிக விவரங்களை கேட்கிறது பாக்.,

சனிக்கிழமை, 30 ஜூன் 2012      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூலை.1 - இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள மும்பை தாக்குதல் தீவிரவாதி அபு ஜுண்டாலை பற்றி அதிகமான விவரங்களை அளிக்குமாறு இந்தியாவை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்ட முக்கிய குற்றவாளியான அன்சாரி என்கிற அபு ஜுண்டாலை டெல்லி போலீசார்  சமீபத்தில் கைது செய்தனர். மும்பை தாக்குதல் தீவிரவாதிகளை இவன்தான் வழி நடத்தினான் என்று கூறப்படுகிறது.

இந்தியாவை சேர்ந்த இவன் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டு மூலம் சவூதி அரேபியாவுக்கு சென்று வந்தவன் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

அபு ஜுண்டாலுக்கு பாகிஸ்தான்தான் பாஸ்போர்ட்டு  கொடுத்துள்ளது என்று இந்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால் இதை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் மறுத்துள்ளார்.

அபு ஜுண்டாலுக்கு பாகிஸ்தான் பாஸ்போர்ட்டு கொடுக்கவில்லை என்றும் அப்படி உண்மையான பாஸ்போர்ட் கிடைத்திருந்தால் அதை தங்களுக்கு அனுப்பி வைக்கலாமா என்றும்  அவர் இந்திய அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

போலி பாஸ்போர்ட்டு வைத்திருப்பவர் பாகிஸ்தான்காரர் என்று சொல்லி விட முடியாது என்றும்  அவர் கூறியுள்ளார்.

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையில் இந்தியாவுடன் ஒத்துழைக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் மாலிக் கூறினார்.

உண்மையான பகைவன் யார் என்பதை இந்தியா கண்டுபிடித்து தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அபு ஜுண்டாலை பற்றி அதிகமான விவரங்களை இந்திய அதிகாரிகள் கொடுக்க வேண்டும் என்றும் அதை தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் டிவிட்டர் இணைய தளத்தில் மாலிக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் மண்ணில் இருந்து கொண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தை ஜுண்டால் நிறைவேற்றி  இருக்கக்கூடும் என்றும் ஆனால் அவனுக்கு பாகிஸ்தான் பாஸ்போர்ட்டு எதையும் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்