முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியர்கள் 40 பேர் உதவி செய்தார்களாம்

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,ஜூலை.-  3 - மும்பையில் தாக்குல் நடத்த தீவிரவாதிகளுக்கு இந்தியர்கள் 40 பேர் உதவி செய்தார்கள் என்று பாகிஸ்தான் அபாண்டமாக கூறியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். அப்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினர்களுக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் 300 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்துல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான் மற்ற 9 தீவிரவாதிகள் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். கசாப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவனுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சவூதி அரேபியாவில்  அன்சாரி என்ற அபு ஜின்டால் என்ற தீவிரவாதி மறைந்திருப்பது குறித்து இந்திய புலனாய்வு துறைக்கு தெரியவந்தது. உடனே சவூதி அரேபிய நாட்டு அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஜின்டாலை டெல்லிக்கு அனுப்பிவைக்க வைத்தனர். டெல்லி வந்த அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்தியதில் காரச்சியில் உள்ள ஒரு அறையில் இருந்து கொண்டு மும்பையை தாக்கிய தீவிரவாதிகளுக்கு கட்டளை பிறப்பித்தது தெரியவந்தது. இதுகுறித்து பாகிஸ்தானிடம் இந்திய தெரிவித்துள்ளதோடு மும்பை தாக்குதல் தொடர்பாக லஷ்கர் தொய்பா தீவிரவாத இயக்க கமாண்டர் ஜகியூர் ரகுமான் லக்வி உள்பட 7 தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா கோரியுள்ளது.
இந்தநிலையில் பாகிஸ்தான் ஒரு அபாண்ட பழியையும் சுமத்தி உள்ளது. மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது தீவிரவாதிகளுக்கு இந்தியர்கள் 40 பேர் உதவி செய்தனர் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தி எக்ஸ்பிரஸ் டிரிபூன் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. அந்த அதிகாரி தன் பெயரை வெளியே கூறிக்கொள்ள விரும்பவில்லை என்றும் அந்த பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகள் புதுடெல்லியில் சந்தித்து பேச உள்ளனர். அப்போது ஜின்டால் கைது குறித்த விளக்கத்தை இந்திய அதிகாரிகளிடம் கேட்கப்படும். பேச்சுவார்த்தையின்போது ஜின்டால் கைது விவகாரம் முக்கிய இடம் வகிக்கும். கைது குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ளுமாறு இந்திய அதிகாரிகளிடம் கேட்கப்படும். ஜின்டால் கைது குறித்து இதுவரை எந்த தகவலையும் எங்களுக்கு இந்தியா கொடுக்கவில்லை. இந்தியர்கள் உதவி இல்லாமல் மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்க முடியாது நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம் என்றும் அந்த அதிகாரி கூறியதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது. மும்பை தாக்குதல் குறித்து முழு விபரத்தையும் எங்களுக்கு கொடுக்க இந்தியா தயங்கி வருகிறது. பாகிஸ்தான் நீதிமன்ற குழு மும்பைக்கு சென்றபோது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கப்படவில்லை. மும்பை தாக்குதல் குறித்த விசாரணை முழுவிபரத்தையும் இந்தியா கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்றும் அந்த அதிகாரி கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்