முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிழக்கு ஆப்பிரிக்க நாட்டுக்கு ரூ.200 கோடி கடன்: மன்மோகன்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப். 20 - கிழக்கு ஆப்பிரிக்க நாடான புரூண்டிக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ரூ. 400 கோடி கடனை தவிர கூடுதலாக ரூ. 200 கோடியை கடனுதவியாக வழங்குவதாக பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக புரூண்டியில் அதிபர் பியர் நுகுரூன் ஜிசா இந்தியா வந்துள்ளார். இந்தியா - புரூண்டி இடையே கல்வி, சுகாதாரம், மருந்து, ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளில் இரு நாடுகளும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. புரூண்டி அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அந்நாட்டுக்கு கூடுதல் கடனுதவி அளிப்பதென முடிவு செய்ததாக பிரதமர் அறிவித்தார். 

சந்திப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டிருப்பதாவது, 

புரூண்டியில் உள்கட்டுமானத்தை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டிருக்கிறது. அங்கு காபூ நீர்மின் நிலையத்தினை அமைக்க ரூ. 400 கோடி கடன் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையில் நவீன விவசாய கருவிகள், உணவு பதப்படுத்தும் தொழில் நுட்பம் ஆகிய துறைகளை மேம்படுத்த ரூ. 200 கோடி மதிப்பில் கூடுதல் கடனளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அந்த நாட்டில் விவசாயம், உள் கட்டுமானம், தயாரிப்பு ஆகிய துறைகளில் இந்திய முதலீடுகளுக்கு ஒப்புதல் தர வேண்டும் என புரூண்டி அதிபரிடம் வலியுறுத்தப்பட்டது. இரு நாடுகளும் கடற்கொள்ளையரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வகுக்க வேண்டிய திட்டங்கள் பற்றி விவாதம் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழுவில் நிரந்தர உறுப்பினர் பதவியை இந்தியா பெறுவதற்கு புரூண்டி தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் என அந்நாட்டு அதிபர் வாக்குறுதி அளித்து இருக்கிறார். 

புரூண்டியில் தகவல் தொழில்நுட்ப உயர் திறன் மையம் ஒன்றை இந்தியா உருவாக்கி வருகிறது. இந்தியா, ஆப்பிரிக்க கூட்டமைப்பு சார்பில் அந்த நாட்டில் உள்கட்டுமான மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் ஆப்பிரிக்க நாடுகள் அனைத்துமே பயனடையும் என்று நான் நம்புகிறேன் என்று பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்