முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது குற்றப் பத்திரிகையில் கனிமொழி - தயாளு பெயர்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.13 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்யும் 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழி, முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆகியோர் இடம்பெறுவது உறுதியாகிவிட்டதாக தெரிகிறது.

உலகத்திலேயே நடைபெறாத அளவுக்கு 2 ஜி. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய தி.மு.க. மந்திரி ஆ.ராசா கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் டி.பி.ரியாலிட்டி உரிமையாளர்களில் ஒருவரான ஷாகித் உஸ்மான் பல்வா மற்றும் ஆ.ராசாவின் தனிச் செயலாளர்களும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட் நேரடியாக கண்காணித்து வருகிறது. இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிகை கடந்த 2 ம் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில்  தாக்கல் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 80 ஆயிரம் பக்கங்களை கொண்டதாக முதல் குற்றப்பத்திரிகை அமைந்தது. 

சி.பி.ஐ.யின் இரண்டாவது குற்றப்பத்திரிகை வருகிற 25 ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறும் என்பது தெரியவந்துள்ளது. 

சி.பி.ஐ. யின் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் ஸ்பெக்ட்ரம் பணமானது கைமாறிய விஷயத்தில் சம்பந்தப்பட்டுள்ள டி.பி.ரியாலிட்டி கம்பெனியும், கலைஞர் டி.வி.யும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற உள்ளன. டி.பி. ரியாலிட்டி கம்பெனி, திஹார் சிறையில் இருக்கும் பல்வாவிற்கும், வினோத் கோயங்கா என்பவருக்கும் சொந்தமானதாகும். கலைஞர் டி.வி. முதல்வர் கருணாநிதி குடும்பத்திற்கு சொந்தமானது. மேலும் ஸ்வான் தகவல் தொடர்பு கம்பெனியில் பல்வாவுக்கும் கோயங்காவுக்கும் 46 சதவிகித பங்குகள் உள்ளன. 

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்யவுள்ள  இரண்டாவது குற்றப்பத்திரிகையில் மகள் கனிமொழியையும், மனைவி தயாளு அம்மாளையும் சேர்ப்பதால் முதல்வர் கருணாநிதிக்கு இந்த விஷயம் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். கலைஞர் டி.வி. மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இடம்பெறுகிறார்கள் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி  ஸ்வான் கம்பெனி மூலம் வந்துள்ளதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், தயாளு அம்மாளுக்கு 60 சதவிகித பங்குகளும், நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவிகித பங்குகளும் உள்ளன. கனிமொழியையும், தயாளு அம்மாளையும் ஒன்றாக குற்றப் பத்திரிகையில் சேர்ப்பதற்கு முதலில் சி.பி.ஐ. பரிசீலனை செய்ததாக தெரிகிறது. அதே சமயத்தில் அவர்கள் ஒதுக்கப்பட்டால் அரசியல் ரீதியான குற்றச்சாட்டையும் சி.பி.ஐ. எதிர்கொள்ள நேரிடும் என்பதால் கனிமொழி மற்றும் தயாளு அம்மாள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்