முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடாபி பதவி விலகமாட்டார் - மகள் ஆயிஷா திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

திரிபோலி, ஏப்.16 - தனது தந்தை கர்னல் கடாபி லிபியா அதிபர் பதவியில் இருந்து விலகமாட்டார் என்று கடாபியின் மகள் ஆயிஷா கடாபி திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அதிபராக இருந்துவரும் கர்னல் கடாபியை பதவி விலகும்படி அந்நாட்டு மக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ஆனால் தான் பதவி விலக முடியாது என்று கர்னல் கடாபி கூறிவருகிறார். இந்த நிலையில் கடாபிக்கு எதிரான உள்நாட்டு கிளர்ச்சி படைகளுக்கும் அரசு ஆதரவு படைகளுக்கும் இடையே கடுமையான உள்நாட்டு போர் நடைபெற்றுவருகிறது. உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் லிபியா மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. உள்நாட்டு கலவரம், படைமோதல்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நீண்டகாலமாக ஆட்சியில் இருக்கும் கடாபி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், மத்திய கிழக்கு நாடுகளும் வற்புறுத்தி வருகின்றன. 

இந்த நிலையில் 1986 ஆம் ஆண்டு தலைநகர் திரிபோலி மீது அமெரிக்க படைகள் நடத்திய போர் விமான தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில் திரிபோலியில் நேற்று 25 வது ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. கடாபியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த மாபெரும் கூட்டத்தில் கடாபியின் மகள், ஆயிஷா கடாபி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் தனது தந்தை பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும், அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். லிபியா மீதான அமெரிக்க தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்தாலும்கூட லிபியா மீதான தாக்குதலுக்கு பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் அமைப்பு கடும் ஆட்சேபணை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்