முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை இண்டியன்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த கொச்சி அணி

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஏப். 17 - ஐ.பி.எல். போட்டி ஒன்றில் வலுவான மும்பை இண்டியன்ஸ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது கொச்சி டஸ்கர்ஸ் அணி. ஐ.பி.எல். போட்டித் தொடரின் 13-வது போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணியும், இலங்கை வீரர் ஜெயவர்தனா தலைமையிலான கொச்சின் டஸ்கர்ஸ் அணியும் மோதின. தான் கலந்துகொண்ட இரண்டு போட்டிகளிலும் வென்று வலுவான நிலையில் இருந்த மும்பை இண்டியன்ஸ் அணியை முதலிரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான நிலையில் இருந்த கொச்சி டஸ்கர்ஸ் அணி சந்தித்தது. டாஸ் வென்ற கொச்சி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் ஜெயவர்த்தனா பீல்டிங்கை தேர்வுசெய்தார். இதனால் மும்பை அணி பேட் செய்தது. துவக்க வீரர்களாக டெண்டுல்கர் மற்றும் ஜேக்கப்ஸ் களமிறங்கினர். துவக்கத்தில் சற்று தடுமாறிய சச்சின் பின்னர் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். துவக்க ஜோடி பார்ட்னர்ஷிப்பாக 61 ரன்களை எடுத்தது. 21 பந்துகளில் 12 ரன்களை எடுத்திருந்த ஜேக்கப்ஸ், கோம்ஸின் பந்தில் கிளீன் போல்டானார். அடுத்ததாக அம்பதி ராயுடு களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய இளம் வீரர் ராயுடு அதிரடியாக ரன்களை குவித்தார். ராயுடு 29 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். ஆனால் 53 ரன்களை எடுத்திருந்தபோது ராயுடு, வினய்குமாரால்  ரன் அவுட் செய்யப்பட்டார்.  அப்போது மும்பை அணி 19.4 ஓவர்களில் 177 ரன்களை எடுத்திருந்தது.  20 ஓவர்களின் முடிவில் மும்பை இண்டியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்தது. சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 100 ரன்களையும், போலார்டு ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். முதலில் 43 பந்துகளில் 50 ரன்களை அடித்த சச்சின், அடுத்து 23 பந்துகளில் அடுத்த 50 ரன்களை அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சதத்தின் மூலம் சச்சின் 20 - 20 போட்டிகளில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்தார். 

183 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொச்சி டஸ்கர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் பிரண்டன் மெக்கலம் மற்றும் ஜெயவர்த்தனா ஜோடி ஆரம்பம் முதலே மிகச் சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் திணறினர். இந்த ஜோடி பார்ட்னர்ஷிப்பாக 128 ரன்களை எடுத்த நிலையில்தான் முதல் விக்கெட்டே வீழ்ந்தது. 36 பந்துகளில் 56 ரன்களை அடித்திருந்த ஜெயவர்த்தனா, மலிங்காவின் பந்தில் கிளீன் போல்டானார். அடுத்து களமிறங்கிய ஜடேஜாவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ரன் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. 17.1 ஓவரில் கொச்சி அணி 156 ரன்களை எடுத்திருந்தபோது அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த மெக்கலம் 81 ரன்களை எடுத்த நிலையில்  மலிங்காவின் பந்தில் போல்டானார். ஆனாலும் கொச்சின் அணியின் வெற்றியை தடுக்க மும்பை அணியால் முடியவில்லை. இறுதிக் கட்டத்தில் அதிரடியாக இரண்டு சிக்சர்களை விளாசிய ரவீந்திர ஜடேஜா கொச்சின் அணியின் வெற்றியை எளிதாக்கினார். இறுதியில் கொச்சி டஸ்கர்ஸ் அணி 19 ஓவர்களிலேயே 183 ரன்களை எடுத்து மும்பை அணியை வென்றது. ரவீந்திர ஜடேஜா 25 ரன்களுடனும், ஹாட்ஜ் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் கொச்சி அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது. ஆட்ட நாயகனாக அந்த அணியின் மெக்கலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட காரணத்திற்காக மும்பை அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கருக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago