முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் அருகே பஸ் மரத்தில் மோதியதில் 3 பேர் சாவு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

பெரம்பலூர்.ஏப்.17 - பெரம்பலூர் அருகே மரத்தில் பஸ் மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 29 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு விழுப்புரத்திற்கு அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பஸ்சை மதுராந்தகத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் ஓட்டுசென்றார்.

இந்தபஸ்  பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு ரோட்டின் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து பஸ் தாறுமாறாக சாலையில ஓடி அருகில் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதி நின்றது.

இதில் பேருந்தின் இடதுபுற இருக்கைகள் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. இந்த விபத்தில் பஸ்சின் கண்டக்டர் திண்டிவனத்தை சேர்ந்த தாமோதரன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலை சேர்ந்த கோமதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 29 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து படுகாயமடைந்தவர்களை இடிபாடுகளில் இருந்து காப்பாற்றினர். மேலும் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் பஸ்சின் இருக்கைகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த 29 பேரை காப்பாற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பழனிவேல்(40), செந்தா(3), முருகானந்தம்(23), துரைராஜ்(35), சக்கரவர்த்தி(30), தையல்நாயகி(40), ராஜபாண்டியன்(32), அலாவுதீன்(32) ஆகியோரின் நிலைமை மோசமாக இருந்ததால் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கு சிகிச்சை பெற்று வந்த அருப்புக்கோட்டை பழங்காநத்தத்தை சேர்ந்த அருணாச்சலம் மகன் ராஜபாண்டியன்(32) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்திற்குள்ளான பஸ்சை மதுராந்தகத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் ஓட்டிவந்தார். இவர் திருச்சியில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டும், பின்னர் சென்னையில் இருந்து திருச்சிக்கும், பின்பு மீண்டும் திருச்சியில் இருந்து விழுப்புரத்திற்கும் பஸ்சை தொடர்ந்து ஓய்வில்லாமல் ஓட்டிச்சென்றதால் விபத்து நடந்த நள்ளிரவு சோர்வடைந்து தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்