முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூப்பர் கிங்ஸ் சென்னைக்கு தண்ணி காட்டிய கொச்சி

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொச்சி, ஏப்.20 - ஐ.பி.எல். தொடர் போட்டிகளில் பலம்வாய்ந்த சென்னை அணி, கொச்சி அணியிடம் பரிதாப தோல்வியை தழுவியது.ஐ.பி.எல். தொடரில் 18-வது போட்டி கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சூப்பர் கிங்ஸ் சென்னை அணியும், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியும் மோதின. மழை வாய்ப்பு இருந்ததால் டாஸ் வென்ற கொச்சி அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே, சென்னை அணியை பேட் செய்யும்படி கேட்டுக்கொண்டார். சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் ஹஸ்ஸி மற்றும் முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். சென்னை அணியின் துவக்கம் அவ்வளவு சரியாக இல்லை. அணியின் எண்ணிக்கை 11 ஆக இருந்தபோது ஹஸ்ஸி, ஆர்.பி.சிங்கின் பந்துவீச்சில், கீப்பர் பட்டேலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக விஜய்யுடன், ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு சிறப்பாக ஆடியது. அணியின் எண்ணிக்கை 48 ஐ அடைந்தபோது 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்த விஜய், பெரைராவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக பத்ரிநாத் களமிறங்கினார். 9 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்களை எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. மழை நின்றபிறகு ஓவர்களை 17 ஆக குறைப்பதாக நடுவர்கள் அறிவித்தனர். தொடர்ந்து விளையாடிய சென்னை அணி ரன் எடுக்க திணறியது. அணியின் எண்ணிக்கை 96 ஆக இருந்தபோது 19 ரன்கள் எடுத்திருந்த பத்ரிநாத், ஹோம்ஸின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட்டானார். இவரை அடுத்து தோனி களமிறங்கினார். இவரும் அதிரடி ஆட்டத்தை ஆடவில்லை. சென்னை அணியில் ரெய்னா மட்டுமே சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். இவரும் எதிர்பாராத விதமாக ரன் அவுட்ஆனார்.  இதனால் நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது. ஆட்டமிழக்காமல் தோனி 14 ரன்களையும், மோர்கெல் 9 ரன்களையும் எடுத்திருந்தனர். கொச்சி தரப்பில் ஆர்.பி.சிங், பெரைரா, ஹோம்ஸ் ஆகியோர் தலா  ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

17 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொச்சி டஸ்கர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் பிரண்டன் மெக்கலம், ஜெயவர்த்தனே ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். அணியின் எண்ணிக்கை 39 ஐ எட்டியபோது ஜெயவர்த்தனே அஸ்வின் பந்தில் 16 ரன்களில் வீழ்ந்தார். இவரை அடுத்து பார்த்தீவ் பட்டேல் களமிறங்கினார். பட்டேல், மெக்கலம் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இந்த ஜோடியை பிரிக்க சென்னை பந்துவீச்சாளர்கள் படாதபாடு பட்டனர். இருந்தாலும் அணியின் எண்ணிக்கை 90 ஐ அடைந்தபோதுதான் பிரிக்க முடிந்தது. 33 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த மெக்கலம், அஸ்வின் பந்தில் மோர்கெலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அணியின் எண்ணிக்கை 110 ஆக இருந்தபோது பட்டேலும் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 34 ரன்கள் எடுத்திருந்தபோது  போலிஞ்சரின் பந்தில் அனிருத்தாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இறுதியில் ஹாட்ஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிரடி காட்டினர். இதனால் 15 வது ஓவரின் முடிவிலேயே கொச்சி அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 135 ரன்களை எடுத்தது. ஆட்டமிழக்காமல் ஹாட்ஜ் 19 ரன்களையும், ஜடேஜா 16 ரன்களையும் எடுத்தனர். சென்னை தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், போலிஞ்சர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனால் கொச்சி அணி சென்னை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆட்ட நாயகனாக கொச்சி அணியின் மெக்கலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்