முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடநாடு சென்றார்ஜெயலலிதா

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

ஊட்டி, ஏப்.20 - ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு வந்த ஜெயலலிதாவிற்கு அ.தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த ஒரு மாத காலமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.,மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் ஓய்வு எடுப்பதற்காக நேற்று(19-ந் தேதி) முற்பகல் 11 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கோவை வந்தார். கோவையில் அவருக்கு அ.தி.மு.க.,நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அந்த வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டபின்

கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டேட்டில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் தளத்தில் பகல் 1.15 மணிக்கு வந்து இறங்கினார். அதன் பின்னர் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து கார் மூலம் எஸ்டேட் பங்களாவிற்கு வந்தார். அப்போது பங்களா நுழைவாயிலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர்கொத்துகளையும், சால்வைகளையும் வழங்கி சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அ.தி.மு.க.,நிர்வாகிகள் வழங்கிய சால்வை மற்றும் மலர்கொத்துகளை புன்முறுவழுடன் பெற்றுக்கொண்ட ஜெயலலிதா அவர்களிடம் நலம் விசாரித்தார். அனைவரிடமும் ஜெயலலிதா நலம் விசாரித்ததையடுத்து அ.தி.மு.க.,வினர் எல்லையில்லா மகிழ்ச்சியில் திக்கு முக்காடினர். 

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கழக செயலாளர் எம்.செல்வராஜ், முன்னாள் அமைச்சர்கள் அ.மில்லர், ஏ.கே.செல்வராஜ், அ.தி.மு.க.,வேட்பாளர்கள் புத்தி சந்திரன், சேலஞ்சர் துரை, தோப்பு வெங்கடாச்சலம், இ.கம்யூ.,வேட்பாளர் ஏ.பெள்ளி, மாவட்ட அவைத்தலைவர் தேனாடு லட்சுமணன், நகர செயலாளர் டி.கே.தேவராஜ், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் ராஜாமுகமது(இளைஞரணி), வக்கீல் பால.நந்தகுமார்(மாணவரணி) வினோத்(பாசறை) பாசறை மாநில துணை செயலாளர் விஷ்ணு பிரபு, ஊட்டி தொகுதி செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் தொகுதி இணை செயலாளர்கள் கே.கே.மாதன், சையது முபாரக், ராமசாமி, ரங்கசாமி, பாரதியார், சக்சஸ் சந்திரன், பலராமன், மகளிரணி சத்தியபாமா, காளியம்மாள், சந்திரா, சாந்தா, சிக்கந்தர் பாஷா, கோபாலகிருஷ்ணன், அனந்தகிருஷ்ணன், தொரை, குன்னூர் சம்பத், வக்கீல் சிவக்குமார், மஞ்சூர் சிவக்குமார், செந்தில், மாயன், கம்பட்டி பெள்ளராஜ், காரமடை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜ்குமார், ஆண்டி, பீமன், எம்.ஜி.சீனிவாசன், விவேகாநந்தன், போஜன், கோடநாடு விஜயன் உட்பட 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டு அம்மா வாழ்க, வருங்கால முதல்வர் வாழ்க என கோஷங்களை எழுப்பினர்.   

அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோடநாடு வருவதையொட்டி நீலகிரி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் காசி விஸ்வநாத் தலைமையில், துணை கண்காணிப்பாளர்கள் கெளதமன், தங்கவேலு, ஆய்வாளர்கள் விவேகாநந்தன், தங்கராஜ், விஜயன் உட்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்