முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கசாப் தூக்கு தண்டனை உறுதியானது - மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, பிப்.22 - பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்ட  தூக்கு தண்டனை செல்லும் என்று மும்பை ஐகோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. இதன் மூலம் கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்து விட்டது. 

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி மராட்டிய மாநிலம் மும்பையில் தாஜ் ஓட்டல் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10  பேர் புகுந்து நடத்திய கொடூர தாக்குதலில் பொதுமக்கள், போலீசார் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்  சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பல இடங்களில் நடந்த சண்டையில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அஜ்மல்  கசாப் என்ற ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான். அவன் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு  செய்தனர். இந்த வழக்கு விசாரணை பல மாதங்கள் நடந்தது. இந்த வழக்கில் மும்பை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு கசாப்புக்கு மரண தண்டனை விதித்து சில மாதங்களுக்கு முன் தீர்ப்பு கூறியது.

இந்த தண்டனையை எதிர்த்து அஜ்மல் கசாப் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தான். இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்தன. கசாப்பின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.  அதன்படி நேற்று மும்பை ஐகோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், ஆர்.வி.மோரே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த பரபரப்பு தீர்ப்பை நேற்று வழங்கியது. கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை செல்லும் என்று அந்த தீர்ப்பில்  கூறப்பட்டுள்ளது.

வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிவிக்கப்பட்ட இந்த தீர்ப்பின் போது 24 வயதான கசாப் வெள்ளை குர்தா அணிந்து தலையை தொங்க போட்டுக்கொண்டு சிறையில் இருந்தபடியே காட்சியளித்தான்.

மேலும் மும்பை தாக்குதல் வழக்கில் அன்சாரி, அகமது என்ற இரு இந்தியர்கள் விடுதலை  செய்யப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை நேற்று அளித்தனர். இவர்கள் இருவரையும் விடுதலை  செய்தது செல்லும் என்று கூறி மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி  செய்தனர். இதனால் மராட்டிய அரசு நேற்று சோகத்தில் மூழ்கியது. 

கசாப்பின்  தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவனுக்கு விரைவில் இந்த  தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

நேற்று இந்த தீர்ப்பு  வழங்கப்படுவதை முன்னிட்டு கசாப் அடைக்கப்பட்டுள்ள ஆர்தர்  சாலையில் உள்ள மத்திய சிறைச்சாலையிலும்,  ஐகோர்ட்டிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்