முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சம்பள நிலுவைத்தொகை வழங்க தேர்தல் கமிஷன் அனுமதி

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.20 - அரசு ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத் தொகை வழங்க தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. 6​வது ஊதியக்குழுவின் அறிக்கைபடி கடந்த 2006​ம் ஆண்டு முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டது. இந்த பரிந்துரைகளை பெற்றுக் கொண்ட தமிழக அரசு அதனை ஆய்வு செய்வதற்கு தனியாக ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு தனது பரிந்துரைகளை அளிக்க 2 ஆண்டுகள் ஆன நிலையில் மாநில அரசு 1.6.2009ம் ஆண்டு முதல் புதிய சம்பளம் வழங்கியது. மத்திய அரசு 1.1.2006​ம் ஆண்டில் இருந்தே தனது ஊழியர்களுக்கு புதிய சம்பளம் கொடுத்தது. தமிழக அரசு 1.1.2007​ம் ஆண்டில் இருந்து மட்டுமே சம்பளம் அளிக்க முடிவு செய்தது. 

இதைத்தொடர்ந்து இந்தத் தேதியில் இருந்து 31.5.2009​ம் ஆண்டு காலத்துக்குள் உள்ள நிலுவைத்தொகையை 3 தவணைகளாக கொடுக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதில் 2 நிலுவைத் தொகை வழங்கப்பட்டு விட்டது.

3​வது நிலுவைத்தொகை 2011​ம் ஆண்டு எப்ரல் மாதத்தில் இருந்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறையில் இருந்ததால் நிலுவைத் தொகை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. 

இதையடுத்து நிலுவைத் தொகை வழங்குவதற்கு அனுமதிகோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோப்புகளை நிதித்துறை அனுப்பியது. அந்த கோப்புகளை டெல்லி தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தேர்தல் அதிகாரி அனுப்பி வைத்தார். அதை பரிசீலித்த தேர்தல் கமிஷன் நேற்று ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஊதியக்குழு நிலுவை வழங்குவதற்கான உத்தரவை ஓரிரு நாளில் நிதித்துறை வெளியிடும் என்று தெரிகிறது. கடைசி கட்ட நிலுவைத் தொகை கிடைப்பதன் மூலம் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு வருக்கும் சராசரியாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்