முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.21 - வாக்குப்பதிவு முடிந்து 6 நாட்களுக்குள்ளேயே தி.மு.க. அரசு பல வன்முறை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளது. இன்னும் வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள் என்னென்ன நடக்குமோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள். எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, வேலியே பயிரை மேய்வது போல, சட்டம்​ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பவர்களே சட்டம்​ஒழுங்கை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபடும் அவல நிலைமை தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது.  

அண்மைக் காலமாக, கொலை, கொள்ளைகள் தமிழ்நாட்டில் அதிகரித்த வண்ணம் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரை 18.4.2011 அதிகாலை ஒரு மர்மக் கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளது.  

இதே போன்று, மதுரை மாவட்டம், உச்சபரம்புமேடு பகுதியில் டீக்கடை நடத்தி வந்த சந்துரு என்பவரை தி.மு.க. ரவுடி கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளது.  மதுரையில் மட்டும் கடந்த 15 நாட்களில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். 

இதே போல், சென்னை கல்லூரி மாணவர் ஒருவரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சாலை மறியல் நடத்திய மாணவ​மாணவியர் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.  

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின் போது, அ.தி.மு.க. ஆதரவாக விஜய் ரசிகர்கள் செயல்பட்டனர் என்பதற்காக, நடிகர் விஜய் வீட்டினை தி.மு.க. ரவுடிகள் நள்ளிரவில் தாக்கியுள்ளனர்.  

இதே போன்று, சென்னையை அடுத்த நெற்குன்றம் பகுதியில் கூலித் தொழிலாளி ஒருவர் மர்மக் கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.   கோவை மேற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரான அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் பணியாற்றியதன் காரணமாக, தே.மு.தி.க. மாவட்டப் பொருளாளர் கேசவன் மீது தி.மு.க. ரவுடி கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது.  இதில் படுகாயமடைந்த  கேசவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவற்றின் உச்சகட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த மும்தாஜ் என்பவர் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.  அப்போது, தி.மு.க.​வைச் சேர்ந்த கல்யாணபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முரளீதரன் தனது வாகனத்திற்கு, மும்தாஜ் வழிவிட மறுக்கிறார் என்று தெரிவித்து, அவரையும், அவரது மகனையும் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை நடத்திய ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்காமல், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல் துறை உதவி ஆய்வாளர்  மும்தாஜ் மற்றும் அவரது மகன் மீது பல்வேறு பிரிவுகளில் காவல் துறை வழக்குகளை பதிவு செய்துள்ளது. 

இந்த அளவுக்கு காவல் துறையினரை தி.மு.க. மேலிடம் நிர்பந்தித்துள்ளது. தி.மு.க.​விற்கு சாதகமாக காவல் துறை செயல்படுவதை கண்டித்து, காவல் துறை உதவி ஆய்வாளர் விருப்ப ஓய்வு கேட்டு மனு செய்துள்ளதாக தற்போது கூறப்படுகிறது.  காவல் துறை உதவி ஆய்வாளருக்கே இந்த கதி என்றால், சாதாரண மக்களின் நிலைமை என்ன என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது என்கின்றனர் பொதுமக்கள். பொது மக்களுக்கும் பாதுகாப்பில்லை; காவல் துறையினருக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலைமை தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது.  

தற்போது தி.மு.க.​வினரால் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைச் சம்பவங்களில் குற்றவாளிகள் பிடிபட்டதாகத் தெரியவில்லை. குற்றவாளிகளை போலீசார் தேடிக் கொண்டே இருக்கின்றனர். இதை வைத்தே மைனாரிட்டி தி.மு.க. அரசு யாருக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். வாக்குப் பதிவு முடிந்து 6 நாட்கள் முடிவதற்குள்ளேயே இந்த நிலைமை என்றால், வாக்கு எண்ணிக்கை நாள் வருவதற்குள் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்ற பீதியில் மக்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அரசை வைத்துக் கொண்டு, இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையை எப்படி நடத்தப் போகிறதோ என்ற ஐயமும் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது. தமிழக மக்கள் மனதில் உள்ள ஐயப்பாடுகளை களையும் வகையில், உறுதியான, திடமான முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்றும்,  சட்டம்​ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும், தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago