முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீல் படையை பாக்., ராணுவம் வளைத்திருந்தால் குண்டுமழை

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், பிப். 14 - அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை கொல்லச் சென்ற அமெரிக்க சீல் படையினரை பாகிஸ்தான் ராணுவம் சுற்றி வளைத்தால், அவர்கள் மீது பயங்கரமான தாக்குதலை நடத்த அதிபர் பராக் ஒபாமா திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

ஒசாமாவைப் பிடிக்க அபோடாபாத் சென்ற சீல் 6 படையினரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுற்றி வளைத்து விட்டால், அவர்களை சரணடையச் செய்யலாம் என்று அதிகாரிகள் ஒபாமாவுக்கு யோசனை தெரிவித்தனர்.

ஆனால், அந்த யோசனையை அடியோடு நிராகரித்த ஒபாமா, அப்படி ஒரு நிலை வந்தால் பாகிஸ்தானை மிகக் கடுமையாக கண்டிக்கவும், அந்த நாட்டின் மீது குண்டு மழை பொழியவும் உத்தரவிட்டிருந்ததாக ஒரு இதழுக்கு பேட்டியளித்துள்ள சான் பிரான்ஸிஸ்கோ க்ரானிக்கிள் இதழின் முன்னாள் ஆசிரியர் கூறியுள்ளார். ஒசாமா பின் லேடனைக் கொன்ற சீல் படையின் கமாண்டோவிடம் பேட்டி கண்டு இந்தத் தகவலை அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை பாகிஸ்தான் படையினர் அமெரிக்க சீல் படையினரை சூழ்ந்து விட்டால் அவர்களை சரணடைய வைத்து விட்டு, உடனடியாக துணை அதிபர் ஜோ பிடேனை பாகிஸ்தானுக்கு அனுப்பி அந்த நாட்டுடன் பேசி சீல் படையினரை விடுவிக்கச் செய்யலாம் என்று திட்டம் தீட்டப்பட்டிருந்தது. ஒசாமா மீதான தாக்குதல் பிளானை தயாரித்த அதிகாரிகள் இதை அதிபர் ஒபாமாவிடம் கூற, கடும் கோபத்தைக் காட்டினார் ஒபாமா.

என்னுடைய படையினர் எக்காரணம் கொண்டும் பாகிஸ்தானிடம் சரணடைய மாட்டார்கள். அப்படி ஒரு நிலை வந்தால் நமது படையினரை சுற்றி வளைத்த பாகிஸ்தான் படைகள் மீது நமது போர் விமானங்கள் கடும் குண்டு மழை பொழிய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை முன் கூட்டியே செய்து விடுங்கள் என்று உத்தரவிட்டார் ஒபாமா. மேலும் அந்த சீல் படை வீரர் கூறுகையில், 

நாங்கள் ஒசாமாவைக் கொல்லச் சென்ற போது திரும்பி பத்திரமாக வருவோம் என்று நம்பிச் செல்லவில்லை. ஒன்று உயிரிழப்போம் அல்லது பாகிஸ்தான் சிறையில் தள்ளப்படுவோம் என்று தான் நினைத்தோம். ஆனால், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் எங்களது போர் விமானங்களை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டார் அதிபர் ஒபாமா. எங்களை யாராவது தாக்கினாலோ சுற்றி வளைத்தாலோ அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

ஒசாமா 3 வது மாடியில் இருந்தார். நாங்கள் மின்சாரத்தை துண்டித்து விட்டதால் இருட்டு நிலவியது. ஒரு அறையிலிருந்து ஒசாமா வெளியே எட்டிப் பார்த்ததைப் பார்த்தேன். நாங்கள் நைட் விஷன் கண்ணாடிகள் அணிந்திருந்ததால் ஒசாமாவை பார்க்க முடிந்தது. ஆனால், ஒசாமாவில் என்னையோ மற்றவர்களையோ பார்க்க முடியவில்லை. ஒசாமாவை நான் நெருங்கிய போது அவரது அறையில் துப்பாக்கிகள் இருப்பதைக் கண்டேன். இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் என்னை நோக்கி சுட வாய்ப்பிருந்தது. இதையடுத்து ஒசாமாவின் தலையில் சுட்டேன். இரண்டு குண்டுகள் ஒசாமாவின் தலையில் பாய்ந்தவுடன் கீழே சரிந்தார். ஆனாலும் உயிர் இருந்தது. இதையடுத்து மூன்றாவதாக இன்னொரு குண்டை தலையில் சுட்டேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்