முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்று பெயரில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் 7 ஆண்டுகள் பணி புரிந்த ஜான் டேவிட்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப். - 25 - இரட்டை ஆயுள் தண்டனை உறுதி  செய்யப்பட்ட ஜான்டேவிட் சென்னையில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் 7 ஆண்டுகள் மாற்று பெயரில் வேலை செய்தது அம்பலம் ஆகியுள்ளது. சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு கடந்த 1996​ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அதே பல்கலைக்கழகத்தில் படித்த சீனியர் மாணவரான ஜான் டேவிட் இக்கொடூர கொலையை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இக்கொலை வழக்கில் கடலூர் செசன்சு கோர்ட்டு ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜான் டேவிட் மேல் முறையீடு செய்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த 2004​ம் ஆண்டு ஜான் டேவிட்டுக்கு விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்தது. இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜான் டேவிட்டுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை செல்லும் என்றும், ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்வதாகவும் பரபரப்பான தீர்ப்பை கூறியது. ஜான் டேவிட்டை உட னடியாக கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்றும் nullநீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருந்தனர். ஜான் டேவிட்டை பிடிக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னிஸ் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. நடராஜன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், ராமநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ஜான் டேவிட்டை பிடிக்க தமிழகம் முழுவதும் வலை விரித்தனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன.
ஜான் டேவிட் சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். அடையாறில் அவர் தங்கி இருந்த இடம், வேலை செய்த நிறுவனம் ஆகியவற்றை சுற்றி வளைத்தனர். போலீஸ் பிடி இறுகியதால் வேறு வழியின்றி கடலூர் மத்திய சிறையில் நேற்று முன்தினம் மாலை ஜான் டேவிட் சரண் அடைந்தார். உடனடியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2004​ம் ஆண்டு தனக்கு விதிக்கப்பட்டிருந்த இரட்டை ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டதும் கடலூர் சிறையில் இருந்து ஜான் டேவிட் விடுதலையானார். அப்போது அவர் nullநீண்ட தலைமுடி, தாடி, மீசையுடன் காட்சி அளித்தார். அதன் பிறகு அவர் பாதிரியாராக மாறி விட்டதாகவும், ஆஸ்திரேலியாவில் குடியேறி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதன் பிறகு ஜான் டேவிட் பற்றி எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை. ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவில் குடியேறி விட்டதாக வெளியான தகவல்கள் வதந்தி என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஜான் டேவிட் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டமிட்டே இதனை பரப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் ஜான் டேவிட் என்ற பெயருடனும், தமிழகம் முழுவதும் தெரிந்த அதே முகத்துடனும் வெளியில் சுற்ற முடியாது, பொது மக்களுடன் இணைந்து வாழ முடியாது என்பதை அவர் உணர்ந்தார். தனது கெட்​அப்​ஐ மாற்றி புது வாழ்க்கையை தொடங்க ஜான் டேவிட் திட்டமிட்டார். அதன்படி, தனது தாடி​ மீசையை எடுத்த ஜான் டேவிட், தலையில் தொப்பி, அணிந்து கண்ணாடி போடத் தொடங்கினார். பின்னர், சென்னைக்கு வந்த அவர் தான் எம்.ஏ. பட்டதாரி என்று சான்றிதழ் இணைத்து வேளச்சேரியில் உள்ள தனியார் பி.பி.ஓ. நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் வேலையில் சேர்ந்தார். இப்பணியில் சேர ஜான் டேவிட்டின் நுனி நாக்கு ஆங்கிலம் பெரிதும் உதவி உள்ளது. அடையாறு வால்மீகி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஜான் டேவிட் குடியேறினார்.
 அவரது தந்தை மாரிமுத்து, தாய் எஸ்தர் லட்சுமி ஆகியோர் மட்டும் அடிக்கடி சென்னை வந்து அவரை பார்த்துச் சென்று உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜான் டேவிட் அங்கு நல்ல பிள்ளையாக பெயர் எடுத்துள்ளார். ஜான் மாரிமுத்து என்றும் தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். கடந்த 20​ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளிவந்த நாளில் இருந்து ஜான் டேவிட் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். பாஸ்போர்ட் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் ஜான் டேவிட் வெளிநாடு செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட போலீசார், அவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருவதை முதலில் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஜான் டேவிட்டை கைது செய்ய தனிப்படையினர் கடந்த 2 நாட்களாக சென்னையில் முகாமிட்டிருந்தனர். அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் சென்று விசாரணை நடத்தினர்.
அங்கிருந்த டேவிட்டின் போட்டோவும், போலீசார் வசமிருந்த போட்டோவும் ஒன்றாக இருந்தது. இதையடுத்தே ஜான் மாரிமுத்து என்ற பெயரில் பணிபுரிந்து வருவது ஜான் டேவிட்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். சென்னையில் வைத்து ஜான் டேவிட்டை எப்படியும் கைது செய்துவிட வேண்டும் என்று போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள் அவர் உஷாராகி சரண் அடைந்து விட்டார். இதற்கிடையே ஜான் டேவிட்டின் வக்கீல் ஆறுமுகராஜ் கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுதாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஜான்டேவிட் 28 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும். இதனிடையே எம்.ஏ. பட்டம் பெற்றதாக ஜான்டேவிட் அளித்த சான்றிதழ் போலி என தெரிய வந்துள்ளது. அதபற்றியும் போலீசார் விசாரணை நடத்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்