முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழுதடைந்த இலவச கலர் டி.வி.யை திருப்பிக் கொடுத்த பொதுமக்கள்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

திண்டுக்கல், பிப்.22 - திண்டுக்கல்லில் பழுதடைந்த இலவச கலர் டி.வி.க்களை தி.மு.க.வினர் வழங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை அவர்களிடமே திருப்பிக் கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மைனாரிட்டி தி.மு.க. அரசு பதவியேற்றதில் இருந்து பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் நல்ல திட்டங்கள் எதுவும் கொண்டுவரவில்லை. இதனால் வேலைவாய்ப்பையும் உருவாக்கித் தர முடியவில்லை. ஒருசில திட்டங்களை செயல்படுத்தினாலும் அத்திட்டங்களின் மூலமாக தி.மு.க.வினரே பயனடைந்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க இலவசம் என்ற பெயரில்  தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த அரிசி புளுத்துப் போய் சாப்பிடுவதற்கு லாயக்கற்றதாக உள்ளது. இதனால் தி.மு.க.வைச் சேர்ந்த பிரமுகர்கள் நியாயவிலைக்கடை பணியாளர்களை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு மூடை, மூடையாக கேரளாவிற்கு கடத்தி வருகின்றனர். இதேபோன்று நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக அறிவித்தனர். இது அறிவிப்போடு நிற்கிறது. விவசாயிகளுக்கு கூறியபடி நிலத்தைத் தராமல் ஏமாற்றி வருகின்றனர். குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதாகக் கூறி வீட்டிற்கு ரூ.75 ஆயிரம் மானியம் வழங்குவதாக தி.மு.க. அரசு அறிவித்துள்ளது. இன்றுள்ள சூழ்நிலையில் ரூ.75 ஆயிரத்தை வைத்துக் கொண்டு ஒரு சிறிய அறையைக் கூட கட்ட முடியாத அளவிற்கு கட்டுமானப் பொருட்களின் விலையும், கூலியாட்கள் சம்பளமும் உயர்ந்துள்ளது. இது மக்களை ஏமாற்றுவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டமாகும். 

விவசாயிகளுக்கு இலவசமாக மோட்டார் பம்ப் செட் வழங்கப்படும் என தி.மு.க. அரசு அறிவித்தது. தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு நேரம், அறிவிக்கப்படாத மின்வெட்டு நேரம் என பல்வேறு வகையில் பட்டியலிட்டு இருளடையச் செய்து வருகின்றனர். இச்சூழ்நிலையில் தி.மு.க. அரசு விவசாயிகளின் காதில் பூ சுற்றுவதற்காக மோட்டார் பம்ப் செட் திட்டத்தை அறிவித்துள்ளனர். இதேபோன்று இலவச கலர் டி.வி. வீடு தவறாமல் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.  திண்டுக்கல் நகருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் 27,000 கலர் டி.வி.க்கள் வந்துள்ளன.  அதனை தேர்தல் சமயத்தில் கொடுத்து மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று விடலாம் என தி.மு.க.வினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்றுமுன்தினம் திண்டுக்கல் நகர் 38, 39, 41, 42, 43, ஆகிய வார்டு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இலவச கலர் டி.வி.க்களை வழங்கினர். இதில் பெரும்பாலோனோருக்கு கலர் டி.வி.க்கள் வழங்கப்படவில்லை.

இதனால் திண்டுக்கல் மேட்டுப்பட்டி சாலை பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு விரைவில் கலர் டி.வி. வழங்க ஆவன செய்வதாக நகராட்சி அதிகாரிகள் கூறி சமாதானம் செய்தனர். மேலும் டி.வி.க்களை வாங்கிச் சென்ற சிலர் அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அது பழுதடைந்திருந்தது தெரியவந்தது. ஓட்டை உடைசலாக இருந்த டி.வியை பொதுமக்கள் தி.மு.க.வினரிடமே திருப்பி அளித்தனர். இதனால் சுமார் 50க்கும் மேற்பட்ட டி.வி.க்களை நகராட்சி அதிகாரிகள் திரும்பப் பெற்று நகராட்சிக்கு கொண்டு சென்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் கலர் டி.வி.க்களை வாங்கிய பலர் இன்னும் அட்டைப் பெட்டியைத் திறந்து பார்க்காமலேயே உள்ளனர். அதனைப் பார்த்தால் குட்டு மேலும் வெளிப்படும்.  

தேர்தல் நெருங்கி வருவதால் அவசரகதியில் டி.வி.க்களை இரவு நேரங்களில் வழங்கி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று விடலாம் என தி.மு.க.வினர் தப்புக்கணக்கு போடுகின்றனர். இது உண்மையிலேயே பலிக்குமா என்பது தேர்தல் முடிவில் தான் தெரியும்.

 

ரகசியம்...

 

திண்டுக்கல் நகரில் பழுதடைந்து போன இலவச கலர் டி.வி.க்களை நகராட்சி அதிகாரிகள் லாரியில் ஏற்றிக் கொண்டு நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கெல்லாம் டி.வி. விரைவில் தரப்படும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார். இதுகுறித்து நமது நிருபர் அவரிடம் கேள்வி எழுப்புகையில், ஏற்கனவே திண்டுக்கல் நகருக்கு டி.வி. வழங்குவதில் பற்றாக்குறை உள்ளது. டி.வி கிடைக்காதவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இச்சூழ்நிலையில் பழுதடைந்த டி.வி.க்கு பதிலாக புதிய டி.வி. எப்படி வழங்குவீர்கள்? என்று கேட்டதற்கு நகராட்சி ஆணையாளர் லெட்சுமி பதிலளிக்கையில் ''அது ரகசியம்'' என ஒரே வார்த்தையில் கூறி விட்டு நகர்ந்து சென்றார். அது என்ன ரகசியமோ, ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்