முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்-கேதரின் திருமணம் லண்டனில் விமரிசையாக நடந்தது

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

லண்டன், ஏப். - 30 - சார்லஸ்-டயானா தம்பதிகளின் மகனான பிரிட்டிஷ் இளவரசர்  வில்லியமிற்கும் அவரது 10 ஆண்டுகால காதலி கேதரின் மிடில்டனுக்கும் நேற்று லண்டனில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. லண்டனில், வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் உள்ள தேவாலயத்தில் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் 50 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். திருமணத்தைக்காண சுமார் 10 லட்சம் பேர் குவிந்ததால் லண்டன் மாநகரமே குலுங்கிப்போனது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது  காதலி கேதரின் மிடில்டனை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி அவர்களின் திருமணம் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் தேவாலயத்தில் இந்த திருமணத்தை கோலாகலமாக நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமணத்திற்கான விரிவான ஏற்பாடுகள் நடந்துவந்தன. இதனால் லண்டன் நகரமே கடந்த சில நாட்களாக விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. இந்த திருமண வைபவத்தில் பங்கேற்க 50 நாட்டு தலைவர்கள் உட்பட சுமார் 2000 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. திருமணம் தொடர்பான  நிகழ்ச்சிகள் நேற்று காலை இங்கிலாந்து நேரப்படி 8.15 மணிக்கு துவங்கின. இதைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் தேவாலயத்திற்கு வந்தவண்ணம் இருந்தனர். அவர்களைத் தொடர்ந்து பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் குடும்பத்தினரும் அடுத்தடுத்து தேவாலயத்திற்கு வந்தனர். மணமகள் கேதரின் குடும்பத்தினர் தேவாலயம் அருகே உள்ள ஹோட்டலில் தங்கி இருந்தனர். முன்னதாக மணமகன் வீட்டார் தேவாலயத்திற்கு வந்ததும், மணமகள் குடும்பத்தினரும் தேவாலயத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து நேரப்படி காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.30) திருமண நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. பிரிட்டீஷ் ராஜகுடும்பத்து திருமணங்கள் எப்போதுமே மிக விமர்சையாக நடத்தப்படும். அதைப்போலவே இந்த திருமணமும் வெகு விமரிசையாக நடந்தது. அதுவும் வில்லியம் பட்டத்து இளவரசர் என்பதால் கொண்டாட்டங்கள் அதிகமாக இருந்தன. இந்த திருமணத்தைக் காண தேவாலயம் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு குவிந்திருந்தார்கள். தாமதமாக சென்றால் இடம் கிடைக்காது என்பதால் நேற்று முன்தினமே தேவாலயம் பகுதியிலும், மணமக்கள் அரண்மனைக்கு செல்லும் பகுதியிலும் லட்சக்கணக்கான  மக்கள் திரண்டுவிட்டனர். இவர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அப்பகுதிகளில் திரண்டிருந்தார்கள். இந்த நிலையில்தான் உலகமே ஆவலோடு எதிர்பார்த்த பிரிட்டீஸ் இளவரசர் வில்லியம் அவரது காதலி கேதரின் ஆகியோரது திருமணம் நேற்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி வெஸ்ட் மினிஸ்ட்டர் அபேயில் உள்ள தேவாலயம் புதுப் பொலிவோடு காணப்பட்டது. அங்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. ஆலயம் புதுப் பொலிவோடு காணப்பட்டது. முன்னதாக மணமக்கள் இருவரும் ஊர்வலமாக காரில் அழைத்துவரப்பட்டனர். அவர்களை வழியெங்கும் திரண்டிருந்த மக்கள் பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தனர். பின்னர் தேவாலயத்திற்கு மணமக்கள் வந்து சேர்ந்தனர். தனது 10 ஆண்டுகால காதலி கேதரின் விரலில் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மோதிரம் அணிவித்து திருமணத்தை உறுதி செய்தார். அப்போது இருவரும் திருமண உறுதியேற்றுக்கொண்டனர்.  அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த ஆரவாரத்தால் அந்த தேவாலயமே அதிர்ந்தது. பின்னர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும், இசை நிகழ்ச்சிகளும்  நடைபெற்றன. டயானா மறைவுக்கு பிறகு இப்படி ஒரு சிறப்பான திருமணம் லண்டனில் நேற்று நடைபெற்றுள்ளது. மேலும் 30 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது சார்லஸ், டயானா திருமணத்திற்கு பிறகு அரச குடும்பத்தில் இப்படி ஒரு திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் தம்பதிகள் இருவரும் மண்டியிட்டு நிற்க திருமண ஒப்பந்தம் வாசிக்கப்பட்டது. இந்த திருமணத்தில் 50 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 90 தொலைக்காட்சிகள் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தன. 2001 ம் ஆண்டு ஆண்ட்ரூ பல்கலையில்தான் கேத்ரினை சந்தித்தார் இளவரசர் வில்லியம். இருவருக்கும் அப்போது காதல் மலர்ந்தது. இந்த காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து நேற்று திருமணத்தில் முடிந்துள்ளது. ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்தான் கேதரின். நேற்று இளவரசரை கரம் பிடித்ததன் மூலம் இவரும் அரச குடும்பத்தில் இணைந்து விட்டார். 350 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமணம் முடிந்ததும் தம்பதிகள் இருவரும் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட  சாரட் வண்டியில் புறப்பட்டு சென்றனர். சார்லஸ், டயானா தம்பதிகள் சென்ற அதே சாரட் வண்டி நேற்று இவர்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. இவர்களை பின் தொடர்ந்து ராணி எலிசபெத்தும் சென்றார். இவர்களது அணிவகுப்பு பக்கிம்ஹாம் அரண்மனையை அடைந்தது. முன்னதாக இவர்கள் செல்லும் வழியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்து தம்பதிகளை பார்த்து உற்சாக வெள்ளத்தில் கையசைத்தனர். பின்னர் அரண்மனை மாடத்திற்கு சென்று தம்பதிகள் மக்களுக்கு காட்சியளித்தனர். அப்போது இளவரசர் வில்லியம், கேதரினுக்கு முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக் கொண்டார். முன்னதாக, இந்த திருமணத்தின் போது கேதரின் விரலில் மோதிரம் அணிவித்த வில்லியமும், அவரது மனைவி கேதரினும் இன்பத்திலும், துன்பத்திலும் இனி இணைபிரியாது இருப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு தேவாலய பதிவேட்டில் கையெழுத்திட்டனர். இந்த திருமணத்தையடுத்து கேம்பிரிட்ஜ் கோமகன் ஆகியிருக்கிறார் இளவரசர்  வில்லியம். இந்த திருமணத்தையொட்டி லண்டனில் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். லண்டன் நகரமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த திருமணத்தை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் கண்டு ரசித்தனர். முன்னதாக திருமணத்தின்போது இளவரசர் வில்லியம்  ராணுவ கர்னல் போன்று சிவப்பு   உடையணிந்து கம்பீரமாக காட்சியளித்தார். கேதரின் பாரம்பரிய வெள்ளை உடையில் புன்னகையுடன் காணப்பட்டார். வில்லியமை கரம்பிடித்ததன் மூலம் தற்போது அவர் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago