முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொலை

திங்கட்கிழமை, 2 மே 2011      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்- வாஷிங்டன், மே 3-சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் நேற்று பாகிஸ்தானில் சுட்டுக்கொன்றனர்.சுமார் 10 ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த அல் கொய்தா இயக்க  தலைவன் பின்லேடனின் கதை இத்துடன் முடிந்தது. கடந்த 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவில் அல் கொய்தா தீவிரவாதிகள் அதிபயங்கர தாக்குதலை நடத்தினர்.  நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக இரட்டை கோபுரம், வாஷிங்டனில் உள்ள பெண்டகன் எனப்படும் அமெரிக்க ராணுவ தளம் ஆகியவற்றின் மீது விமானங்களை மோத விட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இச்சம்பவத்திற்கு தாங்கள்தான் பொறுப்பு என்று அல் கொய்தா கூறியது. இந்த சம்பவத்தினால் திக்கு முக்காடிப்போன அமெரிக்கா உலகில் தீவிரவாதிகளே இருக்கக்கூடாது என்று கூறி சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு போருக்கு அழைப்பு விடுத்தது. இந்த தாக்குதல்களுக்கு காரணமான சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானில்தான் தங்கியிருக்கிறான் என்று அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து கடந்த 2002 ம் ஆண்டு முற்பகுதியில் ஆப்கானிஸ்தான் மீது சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிரான போரை அமெரிக்கா நடத்தியது. இந்த போரில் அமெரிக்க ஆதரவு நாடுகளும் குதித்தன. நீண்ட காலம் போர் நடந்தும் கூட ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகளால் பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள அபோடாபாத் என்ற இடத்தில் உள்ள ஒரு சொகுசு மாளிகையில் ஒசாமா பின்லேடனும் அவனது குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளும் தங்கி இருப்பதாக அமெரிக்க உளவுப் படையான சி.ஐ.ஏ.வுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அமெரிக்க ராணுவத்தின் மூன்று ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தான் வந்தன. பாகிஸ்தான் ராணுவத்திற்கே தெரியாமல் பின்லேடன் தங்கியிருந்த சொகுசு மாளிகை மீது  நேற்று அதிகாலை அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் வந்து திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலின்போது அந்த விடுதியில் இருந்த அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். அதனால் அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் நடத்திய தாக்குதல் பலருக்கு தெரியவில்லை. பின்லேடனின் அரேபிய மெய்க்காப்பாளர்கள்கூட இதை சற்றும் எதிர்பார்க்காமல் சிறிது நேரம் கழித்தே தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது பின்லேடன் ஆதரவாளர்களுக்கும் அமெரிக்க அதிரடிப்படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அமெரிக்க வீரர்களின் துப்பாக்கிச் சூட்டில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். மேலும் பின்லேடனின் இளைய மகன் உள்ளிட்ட மேலும் 3 பேரும் இந்த தாக்குதலில் பலியானார்கள்.  கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனின் உடலை அமெரிக்க வீரர்கள் ஹெலிகாப்டரில் ஏற்றி அண்டை நாடான ஆப்கானிஸ்தானிற்குள் கொண்டு சென்றனர். மேலும் பின்லேடனின் இளைய மனைவி உள்ளிட்ட உள்ளிட்ட சிலரையும் அவர்கள் கைது செய்து அதே ஹெலிகாப்டரில் கொண்டு சென்றனர். இந்த தகவலை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் இதை ஒப்புக்கொண்டுள்ளது. 

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது அமெரிக்கர்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் இது நீதிக்கு கிடைத்த வெற்றி என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து தொலைக்காட்சி மூலம் நேரடியாக மக்களுக்கு அறிவிப்பு செய்தார். கடந்த 10 ஆண்டுகாலமாக தலைமறைவாக இருந்த ஒசாமா பின்லேடனின் கதை இத்துடன் முடிவுக்கு வந்தது. 54 வயதான ஒசாமா சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவனது உடல் அமெரிக்க ராணுவ வீரர்களின் காவலில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பாரக் ஒபாமா தெரிவித்தார். 

இந்த செய்தி அமெரிக்காவில் உள்ள அனைத்து சேனல்களிலும் பரபரப்பாக ஒளிபரப்பானது. பின்லேடன் கொல்லப்பட்ட விஷயம் அறிந்த அமெரிக்கர்கள் கும்மிருட்டு நேரத்திலும் வெள்ளை மாளிகை முன் பெருமளவில் திரண்டு ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் கொண்டு செல்லப்பட்ட பின்லேடனின் உடல் பிறகு இஸ்லாமிய முறைப்படி வளைகுடா பகுதியில் கடலுக்கு அடியில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். பின்லேடனின் சடலத்தை வேறு எங்காவது நிலப்பகுதியில் புதைத்தால்  தீவிரவாதிகள் அல்லது அவரது ஆதரவாளர்கள் அந்த இடத்தை ஒரு நினைவிடமாக ஆக்கிவிடலாம் என்பதால் பின்லேடனின் உடல் கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்