முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதியானது எப்படி? பின்லேடன் பற்றிய புது தகவல்கள்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2011      உலகம்
Image Unavailable

 

சென்னை,மே.3 - பின்லேடன் என்ற பெயரை கேட்டதும் அவன் மிகப் பெரிய தீவிரவாதி என்பதே எல்லோர் மனதிலும் தோன்றும். அவன் எப்படி தீவிரவாதியானான் என்பதற்கு பல மாறுபட்ட தகவல்கள் உள்ளன. அவனைப் போலவே அந்த தகவல்களும் புரியாத புதிர்களாக உள்ளன. 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11 ம் தேதி அமெரிக்காவில் நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரங்களை தாக்கியது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் மூளையாக செயல்பட்ட பின்லேடனை சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதற்காக அமெரிக்கா கடந்த 10 ஆண்டுகளாக பகீரத பிரயத்தனம் செய்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டான். 1957 ம் ஆண்டு சவுதி அரேபியாவில் முகமது ஆலாத் என்ற தொழிலதிபரின் 52 பிள்ளைகளில் 17 வதாக பிறந்தவன் இவன். இவனது தந்தை கட்டிடங்கள் கட்டும் நிறுவனத்தின் அதிபராக இருந்தார். ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன் படையெடுத்தது பின்லேடனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

அங்குள்ள முஜாஹூதீன் என்ற இயக்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு ஆப்கான் வந்தான் பின்லேடன். அவர்களுக்கு பெருமளவில் பண உதவி செய்து சோவியத் படைகளோடு போரிட செய்தான். சில நாட்களில் தனது குழுவினரோடு அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பை ஏற்படுத்தினான். 1989 ல் சோவியத் படைகள் ஆப்கானில் இருந்து வாபஸ் வாங்கவும் பின்லேடன் திரும்பி அரேபியாவுக்கு சென்றான். 1991 ல் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறி அவனை அந்த நாட்டு அரசு வெளியேற்றியது. பின்னர் அவன் சூடானில் தஞ்சம் புகுந்தான். 1993 ல் உலக வர்த்தக மையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு பின்லேடன்தான் காரணம் என்று அமெரிக்கா சந்தேகம் கொண்டது. 

1995 ல் கென்யா மற்றும் தான்சானியா நாடுகளில் அமெரிக்க தூதரகங்களின் அருகே குண்டு வெடித்தது. இதில் 224 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். 1996 ல் அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் வற்புறுத்தலுக்கு இணங்க சூடானில் இருந்து அவன் வெளியேற்றப்பட்டான். தனது 3 மனைவிகள் மற்றும் 10 பிள்ளைகளுடன் ஆப்கான் சென்ற பின்லேடன் அமெரிக்காவுக்கு எதிராக ஜிகாத் என்ற புனித போரை ஆரம்பிப்பதாக அறிவித்தான். பல்வேறு இடங்களில் சிறிய அளவில் வெடி குண்டு தாக்குதல்களை ஆங்காங்கே நடத்தி வந்தான். 2001 ல் இவன் நடத்திய தாக்குதல்களில் மிகவும் மோசமான தாக்குதலை நடத்துவதற்கு மூளையாக செயல்பட்டு அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களையும், பென்டகன் எனப்படும் அமெரிக்க ராணுவ படையின் தலைமையகத்தையும் தகர்த்தான். இந்த நிகழ்வு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த தாக்குதலால் 3000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியானார்கள். இதனால் பின்லேடனை எந்தவிதத்திலும் அழித்து விட வேண்டும் என்று அமெரிக்கா கங்கணம் கட்டிக் கொண்டது. 10 ஆண்டுகளாக மிகுந்த முயற்சி எடுத்து நேற்று அவனுக்கு ஒரு முடிவு கட்டியது அமெரிக்க அரசு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்