முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம் - அமெரிக்க-பாக். உறவில் விரிசல்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், மே 4 - பாகிஸ்தானின் உதவியில்லாமல் ஒசாமாவால் அந்நாட்டில் இவ்வளவு நீண்ட காலம் தங்கியிருக்க முடியாது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இஸ்லாமாபாத்திற்கு மிக அருகிலேயே சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் ஆடம்பரமான பங்களாவில் மிக நீண்ட காலம் தங்கியிருந்துள்ளார். பின்லேடனை அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி கொன்றது.

பின்லேடனுக்கு ஆதரவும் அடைக்கலமும் தரப்படவில்லை என்னும் பாகிஸ்தானின் கூற்றை நம்புவதற்கில்லை, பின்லேடனுக்கு எப்படிப்பட்ட ஆதரவு அளிக்கப்பட்டது என்பதைப் பற்றி யூகிக்கவும் நான் விரும்பவில்லை என்று தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் வெள்ளை மாளிகை முன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.   ஆப்கானிஸ்தானில் இருந்து விரட்டப்பட்ட பிறகு கடந்த 10 ஆண்டுகளாக பாகிஸ்தானியர்கள் பின்லேடனை பாதுகாத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2001 முதல் 2005 வரை பாகிஸ்தான் பழங்குடி இன மக்களுடன் தங்கியிருந்துள்ளார். 2005 ம் ஆண்டுதான் அபோதாபாத்தில் 50 கோடி செலவில் சொகுசு பங்களா கட்டப்பட்டு அதில் கடந்த 6 ஆண்டுகளாக தன் மனைவிகள் மற்றும் குடும்பத்தினருடன் தங்கியிருந்துள்ளார். பின்லேடனின் மாளிகைக்கு மிக அருகிலேயே பாகிஸ்தான் ராணுவ பயிற்சி மையம் இருந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு பின்லேடன் தங்கியிருந்தது நிச்சயமாக தெரியும் என்று அமெரிக்கா கருதுகிறது. 

பாகிஸ்தான் உதவி இல்லாமல் பின்லேடனால் இவ்வளவு துணிச்சலாக இவ்வளவு காலம் நகருக்குள் இருந்திருக்க முடியாது என்று அமெரிக்கா கருதுகிறது. இதுகுறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். பின்லேடன் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் பலமுறை மறுத்துவந்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டு ராணுவ பயிற்சி மையத்திற்கு அருகிலேயே பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டது பாகிஸ்தானிற்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த உலக நாடுகளின் சந்தேகப்பார்வை பாகிஸ்தானின் மீது விழுந்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்கும் விஷயத்தில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. 

பாகிஸ்தான் அரசு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் பின்லேடன் ஏதேனும் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு வார காலத்துக்குள்தான் அபோதாபாத் வந்திருக்க வேண்டும் என்றுள்ளார். ஆனால் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹுசேன் ஹூக்கினி பாகிஸ்தானில் பின்லேடனுக்கு ஆதரவு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கூறுகையில், பாகிஸ்தானில் பின்லேடனுக்கு ஆதரவு இருந்தது. அந்த ஆதரவு அரசுக்குள் இருந்ததா? மாகாண அரசுக்குள் இருந்ததா? அல்லது மக்கள் மத்தியில்இருந்ததா என்பதுதான் பிரச்சனை. 

ஆனால் பாகிஸ்தானின் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள அமெரிக்கா தயாராக இல்லை. அபோதாபாத்தில் உள்ள பங்களா பின்லேடனுக்காகவே கட்டப்பட்டுள்ளது. பின்லேடன் கொல்லப்பட்டதும் பாகிஸ்தானியர்கள் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெல்லாம் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் செய்துவரும் எல்லா உதவிகளையும் அமெரிக்கா விரைவில் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்