முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்லேடனுக்கு வீடு கட்டிக்கொடுத்த கான்ட்ராக்டர் கைது

வியாழக்கிழமை, 5 மே 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், மே 5 - சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தானில் வீடு கட்டிக்கொடுத்த கட்டிட கான்ட்ராக்டர் ஒருவரை பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கடந்த 10 ஆண்டுகாலமாக தலைமறைவாக இருந்த சர்வதேச பயங்கரவாதியும், அல் கொய்தா தீவிரவாத இயக்தத்தின் தலைவருமான ஒசாமா பின்லேடனைபாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் உள்ள ஒரு சொகுசு மாளிகையை சுற்றிவளைத்த அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் நேற்று முன்தினம் சுட்டுக்கொன்றனர். பாகிஸ்தானுக்கே தெரியாமல் இந்த நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது. இதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் இருந்த ஒரு சொகுசு மாளிகையில்தான் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சொகுசு மாளிகை பலகோடி ரூபாய் மதிப்புள்ளது என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள ஏதோ ஒரு பழங்குடி இனப் பகுதியில்தான் ஒசாமா பின்லேடன் தங்கியிருப்பான் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவம் அவர் இஸ்லாமாபாத்திற்கு மிக அருகிலேயேதான் வசித்து வந்திருக்கிறான் என்பதை புலப்படுத்தியுள்ளது.  பின்லேடன் வசித்து வந்த இந்த சொகுசு பங்களாவில் இருந்து 100 கெஜ தூரத்தில்தான் பாகிஸ்தான் ராணுவ பயிற்சி நிலையமும் இருக்கிறது. அதனால் பின்லேடன் அபோதாபாத்தில் தங்கியிருந்தது தங்களுக்கு தெரியாது என்று பாகிஸ்தான் கூறுவதை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் மறுத்துள்ளன. இதனால் பாகிஸ்தானுக்கு உலக நாடுகளிடையே பெரும் நெருக்கடி ஏற்பட்டது. 

இந்தநிலையில்  பின்லேடனுக்கு  சொகுசு பங்களாவை கட்டிக்கொடுத்த கட்டிட கான்ட்ராக்டர் குல்முகம்மது என்பவரை பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். குல்முகமதுவிற்கு குல்மதா அல்லது மிதுகான் என்ற பட்டப்பெயர்களும் உள்ளன. கைது செய்யப்பட்ட குல்முகம்மதுவிடம் பாகிஸ்தான் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அபோதாபாத் அருகேயுள்ள பிலால் நகர் என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று அதிகாலை 2 மணிக்கு  குல்முகம்மதுவை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட குல்முகம்மதுவிற்கு வயது 45 லிருந்து 50 வயதுவரை இருக்கும்.  கைது செய்யப்பட்ட குல்முகம்மது கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பட்டாக்ராம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் அபோதாபாத் நகருக்கு அருகில் கடந்த பல வருடங்களாக வசித்து வருகிறார். இவரை விசாரணைக்காக ரகசிய இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். பின்லேடனின் சொகுசு மாளிகையை கட்டுவதற்கு கட்டுமானப் பொருட்களை கொடுத்த சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமும் பாதுகாப்பு படை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்