முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழியை பாதுகாக்கும் கருணாநிதி ராசா அப்ரூவராக மாறவேண்டும்:-கிருஷ்ணசாமி

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 8  - 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தனது மகள் கனிமொழியை காப்பாற்றுவதற்காக ``தகத்தகாய கதிரவன்'' என்று கூறி வந்த தனது கட்சிக்காரர் ராசாவை குற்றவாளியாக்கி பல்டி அடிக்கும் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி  ராசா நடந்த உண்மைகளை சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று தெரிவித்தார்.  இது பற்றி அவர் சென்னையில் நேற்று (மே.7) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அதிகமாக பலன் பெற்றது கருணாநிதி குடும்பம் என்பதை நாடு அறியும். இந்த இமாலய ஊழலுக்கு ஆ.ராசா பிரதான சதிச் செய்தவர் என்பதில் மாற்று கருத்து இல்லை. எனினும் அவர் ஒரு கருவியே. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து தகவல்கள் மெல்ல கசிய ஆரம்பித்தபொழுதும் நாடாளுமன்றத்தில் ஆ.ராசா மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு எழுந்தபோதும் தமிழ்நாடு முதல்வர் திட்டமிட்டே ராசாவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து பதில் அளிப்பதலிருந்து தவிர்த்து வந்தார்.
ராசா பதவி விலக்கப்பட்டு தீரவேண்டும் என்ற நிர்பந்தம் எழுந்தபோதும் ஜெ.பி.சி விசாரணைக்கு எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியபோதும் கூட முதல்வர் ஜனநாயக ரீதியாக பதில் அளிக்கவில்லை. ஆ.ராசா தலித் என்பதற்காகவே குற்றம் சுமத்தபடுகிறது என்று மெகா ஊழலுக்கு சாதிய வர்ணம் பூசினார். இது ஆரிய-திராவிட போர் என்று முழங்கினார். ஒரு படி மேலே சென்று தோழமை அமைப்புகள் வாயிலாக கண்டன கூட்டங்களுக்கும் நடத்தப்பட்டன. ஆனால் அது எல்லாம் ஒரு சில நாட்களே நீடித்தன.
ராசா கைது செய்யப்பட்டார். பொதுக்குழு கூடியது. பத்திரிகையாளர் கூட்டத்தில் ராசா குற்றவாளி என நீரூபிக்கப்பட்டால் தயவு தாட்சண்யம் இல்லாமல் தி.மு.க.வில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்று ஆவேச பேட்டி அளித்தார். ஆ.ராசா தனது இளமை காலம் தொட்டு தி.மு.க. உறுப்பினராக இருக்கக்கூடியவர். நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினர், தொடர்ந்து மத்திய அமைச்சர் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர், தலித் கதிரவனாக வர்ணிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடன் தலித் என்ற அடையாளத்தை பயன்படுத்துகிறார். அது எடுபடாது என்பதை தெரிந்த பின்பு தவறு செய்திருக்கிறார் என தெரிந்தால் வெளியேற்றுவோம் என்று சொன்னார். அப்பொழுது நடந்த பொதுக்குழுவில் ராஜாவிடமிருந்து பெறப்பட்டதாக ராசாவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி ராஜினாமா கடிதம் வாசிக்கப்பட்டதும் உண்டு.
ராசா கைது செய்யப்பட்டபோது. இப்பொழுது தி.மு.க. பரிவாரங்கள் நீதிமன்றம் சென்றதுபோல் செல்லவில்லை. இன்று வரையிலும் தி.மு.க. அதிகாரபூர்வமாக சட்டதுணை வழங்கவில்லை. இதற்கும் ராசா தி.மு.க.வினுடைய உறுப்பினர் மட்டுமல்ல. குடும்ப உறுப்பினர் போலவே தன்னை அர்ப்பணித்திருக்கிறார்.
இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி, ராசாவுடன் சேர்ந்து கூட்டுச்சதி புரிந்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படிடிருக்கிறார். இப்பொழுது கனிமொழியை காப்பாற்ற பொதுக்குழு கூடுகிறது. கனிமொழியை காப்பாற்றுவதும், கட்சியை காப்பாற்றுவதும் ஒன்றே என தீர்மானம். ஒட்டுமொத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாட்டியாலா நீதிமன்ற அரங்கை நிரப்புகிறார்கள். முதல்தர வழக்கறிஞர்கள் வாதாட அழைக்கப்படுகிறார்கள். கனிமொழியை பிணையில் விட வழக்கறிஞரால் வாதம் வைக்கப்படுகிறது. கனிமொழியை காப்பாற்ற, கனிமொழி நிரபராதி என்று வாதாடுவதும், அதற்குண்டான ஆதாரங்களை முன் எடுத்து வைப்பதும் நியாயமாக இருக்கலாம்.
2 -ஜி ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடன் ராசாவுக்கு தலித் சாயம் பூசி?வர் தமிழ்நாடு முதல்வர், ராசா கைது. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தவிர்க்க முடியாதது என்று தெரிந்தவுடன் தி.மு.க.விலிருந்து ராசா தூக்கி எரியப்படுவார் என்று முதல்வர் கூறினார். இப்பொழுது தங்கள் மகளை காப்பாற்றுவதற்காக எந்த விதமான கூச்சமும் இல்லாமல் அதே தி.மு.க.வால் சிபிஐ நீதிமன்றத்தில் ஆ.ராசாவே பிரதான சதிகாரர் என்று இப்பொழுது குற்றம் சுமத்துகிறார்கள். கோடி, கோடியாக பணம் அவர் வாயிலாக வந்த போதும், குடும்பம் செழித்த போதும், ராசா தலித் கதிரவனாக சித்தரிக்கப்பட்டார். அன்று கடா வை போல வளர்க்கப்பட்டார் இன்று மகளை பாதுகாக்க ஆ.ராசா பலிகடா ஆக்கப்படுகிறார். இது என்ன நியாயம்? தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது குடும்ப அங்கத்தினர் கனிமொழி என்பதற்காக அவர் காட்டும் பாசத்திற்கும், துடிப்பிற்கும், சாதாரண ஏழை தலித் ஆன ஆண்டிமுத்துவின் மகன் தி.மு.க. குடும்பத்தின் அங்கத்தினரானலும் ஆ.ராசாமீது காட்டுகின்ற பரிவிற்கும் உள்ள வேறுபாட்டை இலட்சோப லட்சம் தி.மு.க. தொண்டர்கள் புரிந்துகொள்வார்கள் அதேபோன்று ராசாவுக்கு அவர் அளித்த தலித் முத்திரையும், முன்பு காட்டிய பரிவும் எவ்வளவு போலியானது என்பதையும் தமிழக தலித் மக்கள் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் கோடான கோடி தலித் மக்களுக்கு புரிந்து எள்ளி நகையாடுகிறார்கள்.
3 மாதத்திற்கு முன்பு  ராசாவை பாதுகாக்க முயற்சித்த கருணாநிதி இப்பொழுது ராசாவின் தலித் முகத்திரை கிழிக்கப்பட்டு அவரை குற்றவாளியாக்கி தனது மகளை கருணாநிதி காப்பாற்ற நினைப்பது ராம்ஜெத்மலானி விவாதத்தில் தெரிகிறது. வழக்கு போகும் போக்கை பார்த்தார் கனிமொழியை அப்ரூவராக்கும் தோற்றம் தெரிகிறது. 2 ஜி விவகாரத்தில பலம் பெற்றவர்கள் கருணாநிதி குடும்பம். கலைஞர் டி.வி.க்குத்தான் ரூ.214 கோடி வந்துள்ளதே தவிர ராசாவிற்கு அல்ல. ராசா அதில் பங்குதாரரும் அல்ல. அதன் பங்கு தாரர்கள் தண்டிக்கப்படவேண்டும்.
ராசாவை மட்டும் தலித் என்று ஒதுக்கி தண்டனை தர முயற்சித்தால், தலித் அமைப்புகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். ராசாவுக்கான இந்த போராட்டம் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க நடத்தப்படும் போராட்டம் அல்ல. குற்றம் செய்த எல்லோரும் தண்டிக்கப்படவேண்டும் என்பதுதான். ஊழலுக்கு வக்காலத்து வாங்குவது எங்கள் நோக்கம் அல்ல. அனைவரும் குற்றவாளிகளே, ராஜெத்மலானியின் வாதம் தி.மு.க.வின் வாதமாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும். இவ்வளவு நாள் ராசா குற்றம் அற்றவர் என்று சொன்னது மாறிவிட்டது. தி.மு.க.வின் சார்பில் இப்படிப்பட்ட வாதம் வைக்கப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தலித் என்று தனிமைப்படுத்தினால் நாங்கள் ராசாவுக்கு துணையாக நிற்போம். கருணாநிதி தன்னுடைய குடும்பத்தை முன்னிலைபடுத்துபவர். சர்காரியாக கமிஷனிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக லட்சத்தீவை தரைவார்த்து கொடுத்தவர்.
2 ஜி விவகாரத்தில் ஆ.ராசா நடத்த உண்மைகளை சொல்வதுதான் சரியாக இருக்கும். கருணாநிதி தி.மு.க. ஒரு குடும்பம் என்று சொல்லிவிந்தார். தி.மு.க. என்றால் ஒரு குடும்ப சொத்து என்பது அவர்களது வாதத்தில் தெளிவாகிவிட்டது.
வரும் வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு..க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்