முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. மசோதாவில் அவசரம் கூடாது - யஷ்வந்த் சின்கா

புதன்கிழமை, 23 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,பிப்.23 - சரக்கு விற்பனை வரியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தும் மசோதாவை அவசரப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது என்று முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார். தற்போது உள்ள மத்திய விற்பனை வரி, கூட்டு மதிப்பு வரி, சேவை வரி, இதர மாநில வரிகளுக்கு பதிலாக ஒரே வரி விதிப்பாக சரக்கு விற்பனை வரியை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சில மாநிலங்கள் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாரதீய ஜனதா ஆட்சி செய்து வரும் குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை போலவே உத்தரபிரதேசம் மாநிலமும் இதை எதிர்த்து வருகிறது. 

இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சரான பா.ஜ.க. தலைவர் யஷ்வந்த் சின்கா கூறியதாவது, இந்த திட்டத்தை மாநிலங்கள் மீது திணிக்கும் முன்பு முதலில் மத்திய அளவில் இதை அமல்படுத்திக் காட்ட வேண்டும். மத்திய அளவில் இப்போது மத்திய உற்பத்தி வரி, சேவை வரி உள்ளன. அரசு இவை இரண்டையும் இணைத்து மத்திய அளவில் ஜி.எஸ்.டி.யை உருவாக்கி காட்டட்டும். அது நடைமுறையில் செயல்படுவதாக கண்ட பின்பு மாநிலங்களுக்கு அதை பின்பற்றுவதில் தயக்கம் கிடையாது. அப்படி செய்யாமல் மாநிலங்களின் தலையில் இந்த திட்டத்தை வலுக்கட்டாயமாக திணிக்க கூடாது என்றார்.  

வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது ஜி.எஸ்.டி. குறித்த அரசியல் சட்ட திருத்த மசோதா கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிடுவதை சின்ஹா கடுமையாக விமர்சித்தார். அரசு எடுத்திருப்பது தவறான முடிவு. மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க கூடாது என்றார். பொருளாதார விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலை குழுவின் தலைவராக உள்ளார் யஷ்வந்த் சின்கா. புதிய ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை 2010 நிதியாண்டிலேயே அறிமுகப்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டது. அது முடியாததால் வரும் நிதியாண்டாவது இதை அமலாக்க வேண்டும் என்று எண்ணி வருகிறது மத்திய அரசு. ஆயினும் இது உடனடியாக நிறைவேற்ற கூடிய திட்டமல்ல. முதலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு பின்னர் அனைத்து மாநிலங்களிலும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்