முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கிய சுழல்நிதி போலியா?

புதன்கிழமை, 23 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

ஆண்டிபட்டி,பிப்.23 - தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்ட  சுழல்நிதி கிடைக்கப்பெறாமல் மகளிர் சுய உதவிக்குழுவினர் புலம்பி வருகின்றனர்.பெருமளவில் திட்டங்களை சாதித்துவிட்டதாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசு கடந்த வருடங்களில் மூன்று முறை தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஸ்டாலினால் பல கோடி கடன் தொகை வழங்கி மகளிர் சுய உதவிக்குழுவிற்கு பெரியளவில் நலத்திட்டங்கள் வழங்கியதாக விளம்பரபடுத்திக்கொண்டனர்.உண்மையில் அனைத்தும் ஏட்டளவில் மட்டுமே இருப்பதால் ,சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மெல்லவும் முடியாமல்,விழுங்கவும் முடியாமல் மெளனித்து வருகிறார்கள்.

கடந்த 24.10.2010 அன்று தேனி மாவட்டம் தேக்கம்பட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட சமத்துவபுரம் திறப்பு விழா மற்றும் 80 கோடி அளவிலான மக்கள் நலத்திட்டங்களை வழங்க வந்த துணை முதல்வர் ஸ்டாலின் ,மகளிர் சுய உதவிக்குழுவினருக்கும் கடன் வழங்கினார்.

138 சங்கங்களைச் சேர்ந்த 2060 குழுக்களுக்கு 23 கோடியே 56 லட்சத்து 799 ரூபாய் கடன் வழங்கப்பட்டு இதன் மூலம் 28466 பயனாளிகள் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.ஊரக வளர்ச்சி முகமை மகளிர் திட்டம்,வாழ்ந்து காட்டுவோம் திட்டம் வனத்துறை,கூட்டுறவுத்துறை ,வேளாண்மைதுறை ,கல்வித்துறை,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை உள்ளிட்ட 12 துறைகளின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.ஆனால் இவையனைத்தும் மேடையில் வழங்கப்பட்டதோடு சரி,நான்கு மாத காலமாகியும் ,இன்னும் பயனாளிகளுக்கு வந்து சேரவில்லை.பெண்கள் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் வங்கிக்கு நடையாய் நடந்து களைத்துப்போனது தான் மிச்சம்.

ஆண்டிபட்டி தாலுகாவில் மட்டும் 181 குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு ஒரு குழுவிற்கு 60 ஆயிரம் வீதம் கடன் வழங்க ஸ்டேட் பேங்க் பாஸ்புக் வழங்கப்பட்டுள்ளது.அதே போல் பொருளாதாரக் கடனாக 24 குழுக்களுக்கு 3 லட்சம் வீதம் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.ஆனால் இதுவரை வழங்கப்படவே இல்லை.வங்கி அதிகாரியிடம் கேட்டால் கொட்டேசன் கொடுங்கள் என்று கூறி இழுத்தடிக்கிறார்.ஏற்கனவே தொழிலுக்காக கொட்டேன் கொடுத்த நிலையில் மீண்டும் அதையே சாக்காக கேட்பது,இழுத்தடிப்பதற்கான காரணமாகவே தெரிகிறது.3 லட்சம் கடன் தொகையில் 1 இலட்சம் அரசு மானியமாகவும் ,2 இலட்சம் வங்கி கடனாகவும் உள்ளது.அதே போல் குழுக்களுக்கான 60 ஆயிரம் கடனில் 10 ஆயிரம் அரசு மானியமாகவும் ,50 ஆயிரம் வங்கி கடனாகவும் உள்ளது.அதிக தொகை வங்கி சார்பில் கொடுக்கப்படுவதாலேயே இந்த இழுத்தடிப்பு நடவடிக்கை என்று கூறப்படுகிறது.ஆனால் அரசு குறிப்புகளில் இந்தியாவில் கடனை திருப்பி செலுத்துவதில் தமிழக மகளிர் சங்கங்கள் முன்னோடியாக இருப்பதாகவும் ,மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனில் 90 சதவிகிதம் திருப்பி செலுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.அப்படியிருக்க ஏன் இந்த இழுத்தடிப்பு நடவடிக்கைகள்:

இதில் மற்றொரு வேடிக்கை கடந்த ஆண்டு 2-வது மாதம் போடி தாலுகா லட்சுமிநாயக்கன்பட்டியில் சமத்துவபுரம் திறந்த போது அறிவித்த 3 லட்சத்திற்கான கடனுதவியில் ஆண்டிபட்டி பகுதியில் மட்டும் 14 குழுக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.மேலும் இதை விட ஆச்சர்யமாக கடந்த 16.2.2007-ல் ஆண்டிபட்டியில் நடந்த விழாவில் 2695 குழுக்களுக்கு ரூபாய் 2703 லட்சங்கள் ,43,491 பயனாளிகளுக்காக வழங்கப்பட்டு ,அவையும் இன்னும் சரியான முறையில் செட்டில் ஆகாமல் இருப்பதும் ஆச்சரியத்திற்குரியதே.ஆனால் துணை முதல்வர் ஸ்டாலின் மேடையிலேயே  நின்று பல மணி நேரம் இருந்து கால் கடுக்க அத்தனை குழுக்களுக்கும் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கியதாக கூறிக்கொள்கிறார்.இன்னும் ஒருபடி மேலே போய் கின்னஸில் இடம் பிடிக்க போவதாகவும் பீற்றிக்கொள்கிறார்கள்.ஆனால் உண்மையில் ஏட்டளவில் இருக்கும் இந்த கடன்களை கொடுக்கப்போவதி யார்? 2011 க்கான சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில் அவசர கோலத்தில் அளிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் யாரை ஏமாற்ற நடத்தப்படுகிறது?      

இது ஒருபுறமிருக்க கடனை உடனே பெற்றுத்தருகிறோம் என்று கூறி,3 லட்சம் கடனுக்கு பயனாளிகள் ஒருவருக்கு 2 ஆயிரம் வீதமும்,மற்ற கடன்களுக்கு குழுக்களுக்கு 2 ஆயிரம் வீதமும் லஞ்சம் வாங்கி சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படுவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக இருக்கிறது.

கடன்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பெண்கள் நாளையும்,பொழுதையும் சங்கங்களிலும் ,வங்கிகளிலும் கழித்து வருகிறார்கள்.ஏற்கனவே முறையாக கடனை திருப்பி செலுத்திய குழுக்களுக்கும் இதனால் கடன் தருவது நிறுத்தப்பட்டுள்ளது.ஆண்டிபட்டி பகுதியில் மட்டுமே 181 குழுக்களுக்கு வழங்காமல் இருக்கும் நிலையில்,மாவட்டம் முழுவதிலுமே இதே நிலையிலேயே இருக்கிறது.தமிழகம் முழுவதுமே இதே நிலையாக இருக்குமோ என அச்சப்பட வைத்துள்ளது.வங்கிகளிடம் பரஸ்பரம் புரிதல் இல்லாமல் சித்தன் போக்கு சிவன் போக்காய் எடுத்தோம் ,கவிழ்த்தோம் என்ற அடிப்படையில் இது போன்ற திட்டங்களால் அரசு இயந்திரம் ,தேவையற்ற விழாக்களுக்கு செலவு செய்து,மந்தமாகி போனதாகவே தெரிகிறது.

ஏற்கனவே இந்தியாவை மட்டுமல்லாமல் அகில உலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மெகா,மெகா ஊழல் ஸ்பெக்ட்ரம் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் ,தமிழகத்தின் அரசு இது போன்ற தவறுகளால் மேலும் தலைகுனிவை அடைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்