முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூகம்பத்திற்கு பிறகு நியூசிலாந்தில் அவசரகால நிலை பிரகடனம்

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

மெல்போர்ன், பிப்.24 - நியூசிலாந்தில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் நேற்று முன்தினம் ரிக்டர் அளவையில் 6.3 என்ற அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தில் கிரைஸ்ட்சர்ச் என்ற நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி 200 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ரோடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மின்சாரம், தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதுவரை 55 சடலங்கள் மீட்கப்பட்டு அடையாளம் கண்டறியப்பட்டன. மேலும் 20 சடலங்களை அடையாளம் காணும் பணி  நடைபெற்று வருகிறது.
பூகம்பம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து நாட்டில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரகடனத்தை நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ வெளியிட்டார். இதுஒரு தேசிய பேரழிவு என்றும் அதனால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பூகம்பத்தில் 75 பேர்தான் பலியானார்கள் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. மேலும் 300 பேரை காணவில்லை என்று நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது. இவர்கள் இடிந்துபோன கட்டிடங்களுக்குள் புதைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உயிருக்கு போராடிக்கொண்டிருப்போரை கண்டுபிடித்து காப்பாற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.
கட்டிட இடிபாடுகள் மற்றும் சேதமடைந்த கார்களுக்குள் மேலும் பல சடலங்கள் சிக்கி இருக்கலாம் என்றும், உயிரோடு இருப்பவர்களை மீட்கும் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் நியூசிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து நாட்டிற்கு
ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீட்புக் குழுவினரையும், நிவாரண பொருட்களையும் அனுப்பி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்