முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களை கடத்தி நகை கொள்ளையடித்த கும்பல் கைது

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப். 24 - சென்னை மாநகரில் அடையாறு, பெசன்ட்நகர், திருவான்மியூர், தியாகராயநகர், தேனாம் பேட்டை பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்களை குறி வைத்து ஒரு கும்பல் நூதன முறையில் நகைகளை கொள்ளையடித்து வந்தது. தனியாக செல்லும் பெண்களை காரில் சென்று அணுகும் அந்த கும்பல் எங்கள் முதலாளி பிறந்தநாள் விழாவை இலவச வேட்டி​ சேலை மற்றும் பொருட்கள் வழங்கி சிறப்பாக கொண்டாடுகிறோம். nullநீங்களும் உங்களுக்கு தெரிந்தவர்களும் வந்தால் காரிலேயே அழைத்து சென்று இலவச சேலை மற்றும் பொருட்களை வாங்கி தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறுவார்கள். இதை நம்பி செல்லும் பெண்களை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி அடித்து உதைத்து நகைகளை பறித்து அங்கேயே இறக்கி விட்டுச்சென்று விடுவார்கள். இதுபோன்ற நூதன கொள்ளை சம்பவம் கடந்த 1 வருடமாக நடந்து வந்தது. 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், தென் சென்னை இணை கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் துணை கமிஷனர் சித்தன்னன் தலைமையில் உதவி கமிஷனர் நரசிம்ம வர்மன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க அதிரடி வேட்டை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் திருவான்மியூர் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை நடத்தினர். அதில் 2 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது பத்மநாபன், சுரேஷ்குமார் என்று தெரிய வந்தது. அவர்கள்தான் பெண்களை ஏமாற்றி கடத்திச்சென்று நகைகளை பறித்த கும்பல் என கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் திருவான்மியூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் பத்மநாபன் கொட்டிவாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரியிடம் கார் டிரைவராக வேலை பார்த்தது தெரிய வந்தது. சுரேஷ்குமார் அவரது நண்பர் ஆவார். இருவரும் சேர்ந்து காரில் சுற்றி தனியாக செல்லும் பெண்களை நோட்டமிடுவார்கள். பின்னர் அவர்களை நெருங்கி பேச்சு கொடுத்து இலவச வேட்டி​சேலை தருவதாக ஏமாற்றி கடத்திச் சென்று நகைகளை கொள்ளையடித்தனர். நகைகளை கொடுக்க மறுக்கும் பெண்களை கண்மூடித்தனமாக தாக்குவார்கள். இதுவரை அவர்கள் 18 பெண்களிடம் நகைகளை பறித்துள்ளனர். இதற்காக 5 கார்களை பயன்படுத்தி உள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.   கைதானவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 18 தாலி டாலர், செயின், மோதிரம் என 33 பவுன் நகைகள், 3 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறியதாவது:-​ தற்போது பிடிபட்டவர்கள் போல காரில் சென்று நகை பறிக்கும் கும்பல் சென்னையில் உள்ளனர். அவர்கள் இதுபோல கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது அவர்களது கார் உரிமையாளர்களுக்கு கூட தெரியாது. எனவே கார் டிரைவர்களை வேலைக்கு அமர்த்தும்போது அவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொண்ட பிறகே பணியமர்த்த வேண்டும். அதேபோல் பொதுமக்களும் யாராவது முன்பின் தெரியாதவர்கள் இலவச வேட்டி​சேலை, பொருட்கள் வாங்கி தருகிறோம் என்று கூறினால் அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதை கமிஷனர் ராஜேந்திரன், இணை கமிஷனர் பெரியய்யா ஆகியோர் பார்வையிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்