முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது முறை முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மே.17 - ஜெயலலிதா நேற்று 3-வது முறை முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜெயலலிதாவுடன் சேர்த்து 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த கோலாகல விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு மற்றும் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்லில் அ.தி.மு.க. தனி மெஜாரிட்டி பெற்று அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்கு தமிழக கவர்னர் பர்னாலா அழைப்பு விடுத்தார். பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று மதியம் நடைபெற்றது.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கம் அமைந்துள்ள மெரீனா கடற்கரை பகுதி நேற்று அதிகாலை முதல் அ.தி.மு.க. தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக, போலீசார் பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்தனர். முதலமைச்சராக ஜெயலலிதாவும், அவருடன் 33 மந்திரிகளும் பதவியேற்று கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

12.25 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்பு விழா அவங்கிற்கு வருகை தந்தார். அவர் வருவதற்கு முன்பாக குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பரதன், தேசிய செயலாளர் டி.ராஜா மற்றும் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ.ராமசாமி, தினபூமி பத்திரிகை ஆசிரியர் எஸ்.மணிமாறன், அவரது மகன் எம்.ராமேஷ்குமார் மற்றும் சி.பி.ஐ. மாநில செயலாளர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லக்கண்ணு, சி.மகேந்திரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.வரதராஜன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், எல்.கே.சுதீஷ், தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அவருடைய துணைவியார் ராதிகா சரத்குமார், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற முன்னணி தலைவர் டாக்டர் சேதுராமன், டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், அன்பழகன், நடிகைகள் அஞ்சலி தேவி, சவுகார் ஜானகி, பி.சுசீலா, முன்னாள் டி.ஜி.பி.தேவராம் மற்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், முப்படை தளபதிகள் வருகை தந்திருக்கின்றனர்.

தமிழக கவர்னர் பர்னாலா 12.35 மணியளவில் விழா மண்டபத்திற்கு வருகை தந்தார். அவரை தலைமை செயலாளர் வரவேற்றார். மேடைக்கு வந்த கவர்னரை பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதா வரவேற்றார். இதைத் தொடர்ந்து, தனது அமைச்சரவையில் அமைச்சர்களாக பொறுப்பேற்பவர்களை கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது. முதலமைச்சர் ஜெயலிலதாவுக்கு கவர்னர் பர்னாலா பதவியேற்பு உறுதிமொழி, ரகசிய காப்பு உறுதிமொழி படிவங்களை வழங்கினார். அதில் உள்ள உறுதிமொழிகளை வாசித்து ஜெயலலிதா தமிழக முதல்வாரக பதவியேற்றுக் கொண்டார்.

ஜெயலலிதா பதவியேற்போது, வாசித்த உறுதிமொழி வருமாறு:-

சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புபால் உண்மையான நம்பிக்கையும், மாறாபற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டில் ஒப்பில்லா முழு முதல் ஆட்சியையும் பொறுமையையும், நிலை நிறுத்துவேன் என்றும், தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உண்மையாகவும், உளச்சான்றின் படியும் என் கடமையை நிறைவேற்றுவேன் என்றும், அரசியலமைப்புக்கும், சட்டத்துக்கும் இணங்க அச்சமும், ஒருதலை சார்புமின்றி விருப்பு, வெறுப்பு விலகி பல தரப்பு மக்களுக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும், ஆண்டவர் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.

இவ்வாறு உறுதிமொழி அளித்து பதவியேற்றுக் கொண்டார்.

இதேபோல், ரகசிய பிரமாணமும் ஜெயலலிதா எடுத்துக்கொண்டார். இதே போல, இவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சண்முகவேலு, வைத்தியலிங்கம், எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமி, பழனியப்பன், டி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, பச்சைமால், பழனிச்சாமி, சண்முகநாதன், கே.வி.ராமலிங்கம், எஸ்.டி.வேலுமணி, சின்னையா, எம்.சி.சம்பத், பி.தங்கமணி, டி.செந்தமிழன், கோகுல இந்திரா, ராமஜெயம், பி.வி.ரமணா, ஆர்.டி.உதயகுமார், சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மரியம் பிச்சை, ஜெயபால், இசக்கி சுப்பையா, புத்தி சந்திரன், செல்லப்பாண்டியன், டாக்டர் விஜய், சிவபதி ஆகியோர் மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழா முடிந்ததும், கவர்னர் பர்னாலாவுடன் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சர்கள் போட்டோ எடுத்துக்கொண்டனர். 12.40 மணியளவில் தொடங்கிய பதவியேற்பு விழா நிகழ்ச்சி 1.50 வரை சுமார் 70 நிமிடம் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்