முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அருகே வேன்-பஸ் மோதியதில் 6 பேர் பலி

புதன்கிழமை, 18 மே 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,மே.19 - மதுரை அருகே நடந்த விபத்தில் வேன்- பஸ் மோதியதில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.  குழந்தைகள் உள்பட 23 படுகாயம் அடைந்தனர்.  கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், மருதங்கோடு, துவரச்சன்மலை, செட்டிக்குழி பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் சுற்றுலா வந்தனர். கடந்த 15ம்தேதி புறப்பட்ட இவர்கள் பழநி சென்று சாமி கும்பிட்டுவிட்டு, ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். நேற்று நள்ளிரவு 12.15 மணி அளவில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை வேளாண் கல்லூரி அருகே நான்குவழிச்சாலையில் வேன் வந்த போது மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் வேன் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் வேனில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் அய்யோ, அம்மா என அலறினர். வேன் சுக்குநூறாக நொறுங்கியது. ஆம்னி பஸ்சின் முன்பகுதி லேசாக சேதம் அடைந்தது. வேனில் பயணம் செய்த துவரச்சன்மலையை சேர்ந்த தங்கமணி(45) அவரது மனைவி புஷ்பநளினி(40) மகள் ஷைனி(18) மற்றும் ரசாலம், சந்திரன் என்பவரது 20 வயது மகள், வேன் டிரைவர் குமார் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

   வேனில் வந்த சந்திரன்(50) ஜான்(35) அவரது மனைவி புஷ்பராணி(28) ஸ்டீபன், சுரேஷ்(24) ஸ்ரீதர்(8) கலா(35) ஜெனீஸ்(10) விஜி(10) மீனாள்(30) சுசின்(15) சுருதி(21) ஜனனி(3) சீனிவாசன்(25) உள்பட 23 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மதுரை அரசு மருத்துவனைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து அறிந்த ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். இதே போல் தல்லாகுளம் தீயணைப்பு நிலைய அதிகாரி செழியன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி அஸ்ராகார்க், கூடுதல் எஸ்பி மயில்வாகணன், டிஎஸ்பி பீர்முகமது ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.

  விபத்து குறித்து வேனில் வந்த காயம் அடைந்த சந்திரன் கூறும் போது, நான்கு வழிச்சாலையில் எதிர் திசையில் வந்த ஆம்னி பஸ் வளைவில் அதிக வேகத்தில் திரும்பியதால் இந்த விபத்து நடந்தது என்றார். மதுரை ரிங் ரோட்டில் தற்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் இதே ரிங்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோதிக்கொண்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வாகன ஓட்டிகள் போக்கு வரத்து விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காததாலேயே இந்த மாதிரி விபத்துக்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. எனவே இரவு நேரங்களிலும் திருப்பங்கள் மற்றும் சாலை சந்திப்புக்களில் போலீசார் நின்று ஒழுங்குபடுத்தினால் இந்த மாதிரி விபத்துக்களை தடுக்கலாம் என்ற அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்