முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் விவாதத்தில் பங்கேற்க ராசா கோரிக்கை விடுத்தால் பரிசீலனை

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பிப்.24 - பாராளுமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் குறித்த விவாதத்தில் பங்கேற்பது குறித்து முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கோரிக்கை அனுப்பினால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று மக்களவைத் தலைவர் மீராகுமார் கூறினார். ராசாவிடம் இருந்து முதலில் கோரிக்கை வரட்டும். அதன்பிறகு அதனை பரிசீலிக்கிறேன் என்று பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் மீராகுமார் குறிப்பிட்டார். 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விவாதம் நடைபெறும்போது அந்த விவாதத்தில் பங்கேற்க தன்னை அனுமதிக்குமாறு  கட்சித் தலைமைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளதாக தெரியவருகிறது. அவரை பங்கேற்க அனுமதிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கே இவ்வாறு அவர் பதிலளித்தார்.
ராசா தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிரிமினல் சதி, ஊழல் குற்றச்சாட்டு ஆகிய வழக்குகளின் கீழ் பிப்ரவரி 2 ம் தேதி கைது செய்யப்பட்டார். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளை மீறி ராசா செயல்பட்டதாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சில நிறுவனங்களுக்கு சாதகமாக அவர் விதிகளை மாற்றி மிகவும் குறைந்த விலைக்கு லைசென்ஸ் வழங்கியதாகவும் அவர்  மீது குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து விசாரிப்பதற்காக பாராளுமன்ற கூட்டு விசாரணை குழு அமைக்க பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார். இக்கூட்டுக் குழு அமைப்பது தொடர்பான தீர்மானத்தை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் இன்று(24ந் தேதி) பாராளுமன்றத்தில் கொண்டுவர இருக்கிறார்.  இதையடுத்து 4 மணி நேரம் இதுகுறித்து விவாதம் நடக்க இருக்கிறது. பின்னர் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு  நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்