முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் - தம்பி ராமையா

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      சினிமா
Image Unavailable

 

திண்டுக்கல், மே.22 - மைனா படத்தைப் பார்த்த பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னை வாழ்த்தி கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார் என தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா தெரிவித்தார். தேசிய அளவிலான திரைப்பட விருது வெளியிடப்பட்டது. இதில் மைனா படத்தில் நடித்த தம்பி ராமையாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. தம்பி ராமையாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ராராபுரம் என்ற ஒரு சிறிய கிராமமாகும்.  திண்டுக்கல் பகுதியில் 'பேச்சியக்கா மருமகன்' சினிமா பட சூட்டிங்கிற்காக வந்த தம்பி ராமையாவிடம் விருது பெற்றது குறித்து கேட்கையில்,

தேசிய அளவிலான விருது கிடைத்தது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. இவ்விருதினை எனது குடும்பத்தினருக்கும், இயக்குனர் பிரபு சாலமனுக்கும் சமர்ப்பிக்கிறேன். ஆரம்பத்தில் நான் இயக்குனராகவும், பாடல் ஆசிரியராகவும் விருப்பப் பட்டேன். ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரபு சாலமனின் தொடர்பு ஏற்பட்டது. அப்போது அவர் எனக்கு நடிகராக ஆவதற்கு ஊக்கமளித்தார். அதன்பின்னர் சிறு சிறு வேடங்களில் நடித்தேன். மனுநீதி படத்தை இயக்கி நடித்தேன். மலபார் போலீஸ் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தேன்.

மைனா படத்தைப் பொறுத்தவரை 3 பரிமாண வேடங்களில் நடித்துள்ளேன். குணச்சித்திர வேடமாகவும், நகைச்சுவை வேடமாகவும், கடமையுள்ள போலீஸ்காரராகவும் நடித்துள்ளேன். இப்படத்தில் 30 அடி உயரத்தில் இருந்து உடைந்து போன பாகங்களைக் கொண்டு தயார் செய்யப்பட்ட பேருந்தில் ஏறி நடித்தது மிகுந்த திகைப்பாக இருந்தது. இப்படம் வெளியீட்டு விழாவின் போது நடிகர் கமலஹாசன் பாராட்டினார். அதேபோன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சிறந்த நடிப்பு எனக்கூறி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். தற்போது வேட்டை, சுசீந்திரன், வாகை சூடவா உட்பட பல்வேறு படங்களில் நடித்து வருகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்