முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்செல் கம்பெனி விற்பனை வழக்கில் தயாநிதி மாறன்: சி.பி.ஐ.

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      அரசியல்
Image Unavailable

 

 புதுடெல்லி, மே.22 - சென்னையை சேர்ந்த ஏர்செல் கம்பெனியை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் தொலைதொடர்பு கம்பெனிக்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தயாநிதி மாறனையும் மேக்சிஸ் கம்யூனிகேஷன் கம்பெனியையும் சேர்க்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சென்னையை தலைமையிடமாகக்கொண்ட ஏர்செல் தொலைதொடர்பு நிறுவனத்தை வெளிநாட்டு வாழ் இந்தியரான சிவா என்று அழைக்கப்படும் சிவசங்கரன் என்பவர் நடத்தி வந்தார். இந்த ஏர்செல் நிறுவனத்திற்கு அலைக்கற்றை உரிமம் வழங்க அப்போதைய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற தொலைதொடர்பு நிறுவனத்திற்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு ஏர்செல் கம்பெனியை மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் விலைக்கு வாங்கியது. இந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியை நிறுவகித்து வருபவர் டி. அனந்தகிருஷ்ணன். இவர் ஒரு இலங்கை தமிழர் வம்சாவழியை சேர்ந்தவர். மலேசியாவில் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை உள்ள 6 ஆண்டுகளில் தொலைதொடர்புத்துறையில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. பூர்வாங்க விசாரணை நடத்தி வருகிறது. இந்த பூர்வாங்க விசாரணை அடிப்படையில் அடுத்து முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) ஒன்றை சி.பி.ஐ. வருகிற ஜூலை 6-ம் தேதிக்கு முன்பாக அதாவது சுப்ரீம்கோர்ட்டின் கோடை விடுமுறை காலம் முடிந்து மீண்டும் திறந்த பிறகு தாக்கல் செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கையில்தான் அப்போதைய தொலைதொடர்புத்துறை அமைச்சரும் இப்போதைய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறனின் பெயரை சேர்க்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இதே முதல் தகவல் அறிக்கையில் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியின் பெயரையும் சேர்க்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் கம்பெனியின் முக்கிய நிர்வாகிகள் மாறன் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி எக்னாமிக்ஸ் டைம்ஸ் என்ற ஆங்கில நாளிதழின் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்