முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் மரியம்பிச்சை உடல் அடக்கம் அரசு மரியாதையுடம் நடந்தது

புதன்கிழமை, 25 மே 2011      தமிழகம்
Image Unavailable

திருச்சி. மே. - 25 - திருச்சி பாலக்கரையில் அமைச்சர் மரியம்பிச்சை உடல் நேற்று மதியம் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். திருச்சி சங்கிலயாண்டபுரத்தை சேர்ந்தவர் என்.மரியம்பிச்சை(60). இவர் தமிழக சிறுபான்மை நலத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு திருச்சி ஒத்தக்கடை ரவுண்டானாவில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் நடந்த சதயவிழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் என்.மரியம்பிச்சை, என்.ஆர்.சிவபதி ஆகியோர் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் சென்னை தலைமை செயலகத்தில் நடந்த எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இரு அமைச்சர்களும் தனித்தனி காரில் சென்னை நேக்கி புறப்பட்டனர். இதில் அமைச்சர் மரியம்பிச்சை சென்ற காரில் அதிமுகவை சேர்ந்த வெங்கடேசன், கார்த்திகேயன், சரவணன், சீனிவாசன், அமைச்சரின் பாதுகாவலர் மகேஸ்வரன் ஆகியோர் சென்றனர்.
அமைச்சர் மரியம்பிச்சை சென்ற காரை சென்னை முகப்பேரை சேர்ந்த ஆனந்த் என்பவர் ஓட்டினார். கார் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சி பிரிவு ரோடு அருகே சென்றபோது, முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது, லாரிடிரைவர் திடீரென லாரியை வலது பக்கம் திருப்பியதால் கார் லாரியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்கள்ளானது. இதில் அமைச்சர் மரியம்பிச்சை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த திடீர் கோரசம்பவத்தையொட்டி திருச்சியில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டது. பஸ்களும் சரியாக இயங்கவில்லை. கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
தலைமை செயலகத்தில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்ட பின்பு முதல்வர் ஜெயலலிதா தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அமைச்சர் உடல் வைக்கப்பட்டிருந்த திருச்சி சங்கிலியாண்டபுரத்திற்கு வந்து மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பொதுமக்களின் வேண்டுகோளின்படி சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின்முன்பு நிறுத்தப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று கூறினார்.
அதைதொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், தொழிலதிபர்கள் சாரை சாரையாக வந்து அஞ்சலி செலுத்தினர். நேற்றும் அவரது உடலுக்கு ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினார். சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் எம்.எல்.ஏ மரியம்பிச்சையின் வீட்டிற்கு வந்து மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மதியம் 11.30 மணி வரை நடைபெற்றது. பின்னர் அமைச்சர் மரியம்பிச்சையின் உடல் ஊர்வலமாக சங்கிலியாண்டபுரம் வீட்டில் இருந்து காஜாபேட்டை மெயின்ரோடு வழியாக வேர்ஹவுஸ் வந்து பாலக்கரை நானா மூனா பள்ளிவாசலுக்கு வந்தது. இறுதி ஊர்வலத்திற்கு பிறகு மதியம் 1 மணிக்கு லுகர் தொழுகை நடந்தது. அதைத்தொடர்ந்து இறுதிச்சடங்குகள் நடந்தது. பின்னர் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது. பின்னர் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அமைச்சர் மரியம்பிச்சையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் டாக்டருக்காக படிக்கும் அவரது மகன் ராஜ்முகமது ரஷ்யாவில் இருந்து வந்து கலந்து கொண்டார். மரியம்பிச்சையின் உறவினர்கள், கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், தொழிலதிபர்கள் என லட்சக்கணக்கானோர் இறுதி அ​ஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்