முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரிஸ்ஸா கலெக்டரை விடுவிக்க மாவோயிஸ்டு தீவிரவாதிகள் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

புவனேஷ்வர், பிப். 25 - மல்கான்கிரி மாவட்ட கலெக்டரை விடுதலை செய்ய மாவோயிஸ்டுகள் மறுத்து  விட்டனர். ஆனால் ஜூனியர் என்ஜினீயரை மட்டும் அவர்கள் விடுதலை  செய்துள்ளனர்.  சிறையில் அடைக்கப்பட்டுள்ள 300 பழங்குடி இனத்தவரை விடுதலை  செய்தால்தான் கலெக்டரை விடுதலை  செய்வோம் என்றும் அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரிஸ்ஸா மாநிலம் மல்கான்கிரி மாவட்ட கலெக்டர் ஆர்.வி. கிருஷ்ணா, ஜூனியர் என்ஜினீயர் பவித்திர மஹி ஆகியோரை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
மாவட்ட கலெக்டரையும் என்ஜினீயரையும் விடுவிக்க ஒரிஸ்ஸா மாநில அரசு நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதை அடுத்து ஆந்திராவில் இருந்து இரு பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் மாவோயிஸ்டுகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மேலும் மாவோயிஸ்டுகளின் 14 கோரிக்கைகளில் சில கோரிக்கைகளை ஒரிஸ்ஸா அரசு ஏற்றுக்கொண்டது. இதை அடுத்து சிறையில் இருந்த மாவோயிஸ்டுகள் சிலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதனால் மாவட்ட கலெக்டரும், என்ஜினீயரும் நேற்று வீடு திரும்புவார்கள் என்று ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
ஆனால் ஜூனியர் என்ஜினீயரை மட்டும் மாவோயிஸ்டுகள் விடுதலை  செய்தனர். அவரிடம் ஒரு கடிதத்தையும் அவர்கள் கொடுத்தனுப்பினர்.
அந்த கடிதத்தில் தங்களது தலைவரின் மனைவி பூமா, மற்றும் ஸ்ரீராமுலு, ஸ்ரீஸ்ரீனிவாசலு ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சிறையில் அடைத்துள்ள 300 பழங்குடியின மக்களை விடுதலை  செய்ய  வேண்டும் என்றும் மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்துள்ளனர்.
இதனால் மாவட்ட கலெக்டர் விடுதலை  செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த ஒரிஸ்ஸா மாநில அரசு பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.
இப்போது மாவட்ட கலெக்டரை மாவோயிஸ்டுகளிடமிருந்து மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்