முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரோ ஒப்பந்தம் - பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,பிப்.25 - இஸ்ரோ அமைப்பு செய்து கொண்ட ஒப்பந்தம் எனது அலுவலக ஒப்புதலுக்காக வரவே இல்லை என்று பாராளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன்சிங் மறுத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு மூலம் நாட்டுக்கு ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை துறை அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருந்தார். இதையடுத்து தொலைத் தொடர்பு துறையின் அமைச்சராக ராசா பதவி விலகினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகும், அவரது வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டுகளுக்கு பிறகும் தற்போது ராசா திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ஊழலை மிஞ்சும் வகையில் மற்றொரு ஊழல் விவகாரம் அம்பலமானது. இந்த ஊழல் மூலம் நாட்டுக்கு ரூ 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதுதான் இஸ்ரோ செய்து கொண்ட ஒப்பந்தம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் வர்த்தக நிறுவனம்தான் ஆந்த்ரிக்ஸ். இந்த ஆந்த்ரிக்ஸ் நிறுவனத்துக்கும் மல்டிமீடியா நிறுவனமான தேவாஸூக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம்தான் எஸ். பாண்ட் அலைவரிசை ஒதுக்கீட்டு ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரூ 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரமும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் எதுவுமே தனக்கு தெரியாது என்கிறார்.
நேற்று பாராளுமன்ற மேல்சபையில் கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து ஒரு கேள்வி கேட்டனர். ஆந்த்ரிக்ஸ் நிறுவனத்துக்கும், தேவாஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம் கொடுத்ததில் பிரதமர் அலுவலகத்தில் யாருக்கு பொறுப்புள்ளது என்று ஒரு தடாலடி கேள்வியை கேட்டனர். இதற்கு பதிலளித்த பிரதமர் இந்த இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கோரி தனது அலுவலகத்திற்கு எதுவும் வரவில்லை என்று குறிப்பிட்டார்.
அரசாங்கத்திடம் ஒப்புதல் கோரி இந்த ஒப்பந்தம் வரவே இல்லை என்றும் பிரதமர் மன்மோகன்சிங் மறுப்பு தெரிவித்தார். எனவே இதில் பிரதமர் அலுவலகம் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரதமர் விளக்கமளித்தார். ஆனால் இந்த பதிலில் எதிர்க்கட்சிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்