முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பூஜை தொடக்கம்

வியாழக்கிழமை, 2 ஜூன் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,ஜூன்.2 - திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோயிலில் ஜூன் 6 ம் தேதி நடக்கும் மகா கும்பாபிஷேகத்திற்காக இன்று மாலை யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. 

முருகப் பெருமானின் முதல் படை வீடும் எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2000 ம் ஆண்டில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி. அதன்படி திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அங்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. 

ரூ. 5 கோடியில் கோயில் மராமத்து பணிகள் செய்து ஜூன் 6 ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. திருப்பணிகள் துவங்கும் வகையில் அக்டோபர் 30 ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கோயிலில் உள்ள சுவாமி சிலைகள், தூண்கள், சுவர்களில் மராமத்து பணிகள் நடக்கின்றன. கோயிலில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் முதல் முறையாக கமலம் வரையும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

7 நிலைகளை கொண்ட 150 அடி உயர ராஜ கோபுரத்தில் வர்ணம் தீட்டும் பணி நிறைவடைந்து வண்ணமயமாக கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோயிலுக்குள் உள்ள கருங்கற்களினால் ஆன சுவாமி பீடங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணியும் நடக்கிறது. மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்யகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமி சிலைகளுக்கான மராமத்து பணிகள் நிறைவடைந்து புணுகு சாத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக மூலஸ்தானத்தில் ஏ.சி. பொருத்தப்பட்டு வருகிறது. 

 

யாகசாலை பூஜைகள் இன்று துவக்கம்:

 

யாகசாலை பூஜைகளுக்காக ரூ. 8 லட்சம் செலவில் 80 யாக குண்டங்கள் ஒரு பிரதான வேதிகையுடன் 5 வேதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 3 யாகசாலைகளும் அமைக்கப்பட்டு இன்று மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் முதல் கால யாகசாலை பூஜை துவங்குகிறது. நாளை காலை 2 ம் காலம், மாலையில் 3 ம் காலம், வருகிற 4 ம் தேதி காலையில் 4 ம் காலம், மாலையில் 5 ம் காலம், வருகிற 5 ம் தேதி காலையில் 6 ம் காலம், மாலையில் 7 ம் காலம் யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. அதை தொடர்ந்து கும்பாபிஷேக தினமான ஜூன் 6 ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம்கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு மகாதூப தீபாராதனைகள் நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 6.15 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்கள் புறப்பாடாகி ராஜகோபுரத்தில் மேல் பகுதியில் உள்ள கலசத்திற்கும், கோவர்த்தனாம்பிகை, வல்லப கணபதி விமானங்களுக்கும் கொண்டு செல்லப்படும். பூஜைகள் முடிந்து காலை 6.45 மணி முதல் 7.15 மணிக்குள் கோபுர கலசங்களிலும், விமானங்களிலும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறும். 

அதனை தொடர்ந்து மூலவர்கள், பரிகார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி திருவீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். அதனை தொடர்ந்து 7 ம் தேதி முதல் மண்டலாபிஷேகம் நடக்கிறது. 

 

புனித தீர்த்தங்கள் வருகை:

 

யாக சாலையில் வைத்து பூஜிக்கப்படுவதற்காக திருப்பரங்குன்றம், மதுரை, அழகர்கோவில் மலை மீது உள்ள நூபுர கங்கை தீர்த்தம், காவிரி கங்கை உட்பட 6 புனித தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டுள்ளது. அவை தங்கம், வெள்ளி, குடங்கள் மற்றும் பித்தளை செம்புகளில் நிரப்பி, யாகசாலையில் வைத்து 8 கால பூஜைகள் நடக்கிறது. 6 ம் தேதி காலை இந்த புனித தீர்த்தங்கள் மூலம் கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகமும், மூலவர்களுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். 

 

கோயில் ஆஸ்தான மண்டபத்தில் சுழலும் லிங்கம், நந்தி.

 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலுக்குள் உள்ள அனைத்து மண்டபங்களின் மேல் பகுதியிலும் கமலங்கள் வரையும் பணி நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஆஸ்தான மண்டபத்தின் மேல் பகுதியில் ஒரு புறம் சுழலும் லிங்கமும், மற்றொரு புறம் சுழலும் நந்தியும் புதிய தொழில் நுட்பம், கலை நயத்துடன் வரையப்பட்டுள்ளது. தரையில் இருந்து இவற்றை பார்க்கும் பக்தர்கள் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் இந்த நந்தியும், லிங்கமும் அவர்களை நேர்த் திசையில் பார்ப்பது போன்று, எந்த பக்கம் நின்று பார்த்தாலும் அது நேராக தெரிவது போன்றும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago