முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேறுகால உதவி திட்டம்: சோனியாகாந்தி துவங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 2 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

 

மேவாத், ஜுன் 2 - கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மருந்து, இலவச உணவு, இலவச பிரசவம் உள்ளிட்ட மகப்பேறு தேசிய திட்டம் ஒன்றை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று துவக்கிவைத்தார். இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து குறைவு காரணமாக அதிக அளவில் மரணம் அடைந்து வருகின்றனர். மேலும் போதுமான பேறுகால வசதிகள் இல்லாததாலும் கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்தின்போதே பலியாவதும் அதிகரித்துவருகிறது. கர்ப்பிணிப் பெண்களின் இந்த உயிரிழப்பை தடுக்க மத்திய அரசு தேசிய அளவில் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் தேசிய மகப்பேறு உதவித் திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தை அரியானா மாநிலம் மேவாத் என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியாகாந்தி நேற்று துவக்கிவைத்தார். 

இந்த திட்டத்தின்படி நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மருந்து, இலவச உணவு, இலவச பிரசவம் போன்ற வசதிகள் செய்யப்படுகின்றன. 

இந்தியாவில் ஆண்டுதோறும் குழந்தை பிறப்பின்போது 67 ஆயிரம் தாய்மார்கள் மரணமடைந்து வருகிறார்கள் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாக இருந்துவருகிறது. மேலும் ஆண்டுக்கு 9 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரே மாதத்தில் மரணமடைந்துவிடுகின்றன. இதுவும் கவலைக்குரியது என்று கூறிய சோனியா காந்தி இந்த உயிர்ப் பலிகளை தடுக்கும் வகையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மருந்து, உணவு, பிரசவம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அமுல்படுத்தியுள்ளது என்றார். கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான மருந்து, மருத்துவ சோதனைகள் மற்றும் ரத்தம் கொடுத்தல் போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது என்றும் சோனியா கூறினார். இதற்காக ஆகும் செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்