முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பருவ மழை தொடங்கியது

வெள்ளிக்கிழமை, 3 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன் 3 -  தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக குமரி, நெல்லை மாவட்டங்களிலும், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. தென்மேற்கு பருவமழை ஜூனில் துவங்குவது வழக்கம். ஆனால் இம்முறை பருவமழை வழக்கத்திற்கு முன்னதாகவே மே 30 லேயே கேரளாவில் துவங்கிவிட்டது. இதனால் தமிழக எல்லையோர மாவட்டங்களில் இந்த மழையின் தாக்கம் தென்பட ஆரம்பித்தது. தமிழகத்தில் கடந்த மே மாதம் 4 ம் தேதி துவங்கிய கத்தரி வெயில் 29 ம் தேதிவரை மக்களை வாட்டி வதைத்துவிட்டது. இந்நிலையில் கத்தரி வெயில் முடிந்தபிறகும் பகலில் வெயிலின் கொடுமை மக்களை வாட்டி வதைத்துவருகிறது. ஆனால் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசியது மக்களுக்கு ஓரளவு இதமாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்துள்ளது. குறிப்பாக எல்லையோர மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது. சென்னையிலும் மழை கொட்டித் தீர்த்தது. மதுரையிலும் ஓரளவு மழை பெய்து மக்களை மகிழ்வித்தது. 

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இம்மாவட்டத்தில் சோலையார் அணையில் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. மேலும் திருப்பூர், உடுமலை, அவிநாசி, பல்லடம், பொங்கலூர் உள்பட பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. 

குமரி மாவட்டத்திலும் பருவமழை தொடங்கியுள்ளதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நாகர்கோவிலில் நேற்று முன்தினம் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. பேச்சிப்பாறை அணை பாசனத்திற்கு திறக்கப்படுவதால் அப்பகுதி விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பரவலாக பெய்வதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. பொதுவாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்துள்ளதால் கோடை வெப்பம் சற்று தணிந்து காணப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்