முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவாரி அதிபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      வர்த்தகம்
Image Unavailable

மதுரை,ஜூன்.4 - மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் கல்குவாரி அதிபர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். தவறுகளை திருத்திக்கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.   மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.  விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனைக்கு வந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். இதே போல் மதுரை ரிங் ரோட்டிலும் விதிமீறும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று மாலை கலெக்டர் சகாயம் மதுரை மாவட்டம் மேலூர்  பகுதிகளில் உள்ள கிராமங்களில் ஆய்வு செய்தார். மேலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜெமினிப்பட்டி, அம்மன்கோவில்பட்டி, கொங்கம்பட்டி, கீழவளவு பகுதிகளை பார்வையிட்டார். கீழவளவில் கல்குவாரிகளால் சேதம் அடைந்த சமுதாயக்கூடம், நூலகம் மற்றும் பள்ளிக்கட்டிடத்தை கலெக்டர் சகாயம் பார்வையிட்டார். அப்போது கீழவளவு ஊராட்சித்தலைவர் தர்மலிங்கத்திடம் இந்த ஊரில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், குவாரிகளால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் கேட்டறிந்தார். தனியார் கல்குவாரிகளின் ஆக்கிரமிப்புக்கள், மற்றும் அவர்கள் செய்யும் தவறுகள் குறித்து கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதைக்கேட்ட கலெக்டர் கல்குவாரி அதிபர்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும் கிராமத்தில் அரசியல்வாதிகள் செய்துள்ள ஆக்கிரமிப்புக்களை உடனே அகற்றும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தனியார் குவாரிகளால் அரசு கட்டிடம் சேதம் அடைந்திருந்தால் அந்த கட்டிடத்தை குவாரி அதிபர்களே புதிதாக கட்டித் தரவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

     கீழவளவு கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கலையரங்கு பணிகளை 15 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிட்டார். இதன் பிறகு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் நடந்து  வரும் சாலைபணி மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். தனியாமங்கலம் கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் 27.91 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் சாலைப்பணிகளையும், வண்ணாம்பாறைப்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிடத்தையும் ஆய்வு செய்து ஊராட்சி கணக்குகளை சரிபார்த்தார். இந்த ஆய்வின் போது மேலூர் வட்டாட்சியர் மோகனா, கொட்டாம்பட்டி ஊராட்சி ஆணையாளர் எஸ்.மகேசன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்