முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பெக்ட்ரம் ஊழல்: முக்கிய பங்கு தயாநிதி மாறனுக்குதான்

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, மே.4 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை துவக்கியதில் முதலில் முக்கிய பங்கு வகித்தவர் தயாநிதிமாறன்தான் என்று பாராளுமன்ற பொதுகணக்குக்குழு தலைவரும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவருமான முரளி மனோகர் ஜோஷி குற்றஞ்சாட்டியுள்ளார். 

நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் அவரது உதவியாளர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிந்ததே. அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.214 கோடி லஞ்சப்பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக அந்த டி.வி.யின் பங்குதாரர்களில் ஒருவரான கனிமொழி எம்.பி.யும் கைது செய்யப்பட்டு அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சமீபத்தில் தொழிலதிபர் கரீம் மொரானியின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு அவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் தற்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சராக இருக்கும் தி.மு.க.வை சேர்ந்த தயாநிதிமாறன் மீதும் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகின்றன. ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமம் வழங்க மறுத்தது மற்றும் அரசின் தொலைபேசி இணைப்புகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுக்கள் தயாநிதிமாறன் மீது கூறப்பட்டு வருகின்றன. இந்த குற்றச்சாட்டுக்களை தயாநிதிமாறன் மறுத்து வருகிறார். இந்தநிலையில் பொதுக்கணக்குக்குழு தலைவரும் பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவருமான முரளி மனோகர் ஜோஷி லக்னோவில் சில விஷயங்களை தெரிவித்தார். அப்போதும் அவர் தயாநிதிமாறன் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். இந்த ஊழல் எப்படி தொடங்கியது என்றெல்லாம் ஜோஷி விளாவாரியாக விவரித்தார். இன்னும் ஒருபடி மேலே போய் ஸ்பெக்ட்ரம் ஊழலை துவக்கியதில் முக்கிய பங்கு வகித்தவரே தயாநிதிமாறன்தான் என்றும் ஜோஷி குற்றஞ்சாட்டினார். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு விஷயத்திலும் விலைநிர்ணய கொள்கை விஷயத்திலும் மற்ற அமைச்சர்களின் அதிகாரத்தை தன்னிடம் எடுத்துக்கொண்டவர் தயாநிதிமாறன் என்றும் ஜோஷி குற்றஞ்சாட்டினார். பல ஆவணங்கள் மாற்றப்பட்டன. அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. பின்னர் அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தும் தொலைதொடர்புத்துறைக்கே மாற்றப்பட்டன. அதிலிருந்துதான் எல்லா ஊழல்களுமே ஆரம்பித்தது என்று விபரித்து சொன்னார் ஜோஷி. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை விலை நிர்ணயத்தை நிதி அமைச்சகத்துடன் இணைந்துதான் தீர்மானிக்க வேண்டும். அப்படித்தான் கடந்த 2003-ம் அமைச்சரவையில் சொல்லப்பட்டது. ஆனால் அதை ஏன் மாறன் மாற்றினார் என்று ஜோஷி கேள்வி எழுப்பியுள்ளார். தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது 2007-ம் ஆண்டில் எந்த சூழ்நிலையில் அவர் ஏர்செல் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கினார் என்று ஒரு நாளிதழ் கேள்வி எழுப்பிய பிறகுதான். இவரது விவகாரமே அம்பலத்திற்கு வந்துள்ளது என்றும் ஜோஷி கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஏர்செல் நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்க மறுத்தவர் தயாநிதிமாறன். ஆனால் மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு அந்த நிறுவனம் கைமாறிய பிறகு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. தயாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டி.வி. நிறுவனத்தில் ரூ.675 கோடியை மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்த பிறகே தயாநிதிமாறன் தடைகளையெல்லாம் அகற்றி லைசென்ஸ் வழங்கியிருக்கிறார் என்றும் முரளிமனோகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்