முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் பணிகள் குறித்து ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

தருமபுரி,ஜூன்.5 - ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த ஆட்சிக்காலத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. ரூ.1330 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட திட்டம் தற்போது ரூ.1900 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், திட்டப்பணிகள் 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தொய்வடைந்துள்ளதாக வந்த புகாரின் பேரில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் ஆகியோர் நேற்று ஒகேனக்கல் சென்று ஆற்றுப் பகுதியில் நடைபெறும் நீரேற்று நிலைய பணிகள், சுத்திகரிப்பு நிலையம மற்றும் மடம் பகுதியில் நடைபெறும் வரும் சமநிலை நீர்தேக்கத் தொட்டி மற்றும் குழாய்கள் பதிக்கும் பணிகளை பார்வையிட்டனர். 

பணிகளை பார்வையிட்ட பின்னர் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆகியோர் அமைச்சர்களுக்கு நடைபெற்ற பணிகள், நடந்து வரும் பணிகள் குறித்து விளக்கிக்கூறினர். தொடர்ந்து தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

தருமபுரி நகரம் குமாரசாமிப்பேட்டை, பென்னாகரம் ரோட்டில் கடந்த பல மாதங்களாக பாதாள சாக்கடை திட்டத்திற்கு போக்குவரத்து தடைசெய்துள்ள நிலையை பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவது குறித்து புகார் வந்ததையடுத்து, அமைச்சர்கள் பென்னாகரம் ரோடு, குமாரசாமிப்பேட்டை பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை பார்வையிட்டு, வரும் 30-ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். 

தருமபுரி நகரில், நேதாஜி பைபாஸ் சாலையில் மந்த கதியில் நடைபெற்று வரும் சாலை விவாக்கப் பணிகளையும் பார்வையிட்ட அமைச்சர்கள் அப்பணிகளை உரிய காலத்திற்குள் விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டனர். அமைச்சர்கள் ஆய்வின் போது, மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன், எம்.எல்.ஏ.கள் பாஸ்கர், நஞ்சப்பன், மாவட்ட கலெக்டர் (பொ) கணேஷ், உதவி கலெக்டர் மரியம்சாதிக், திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் உட்பட பலர் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்