முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சரவையில் இருந்து இன்று தி.மு.க. வெளியேறலாம்?

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.10 - மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. அமைச்சர்கள் வெளியேற இன்று நடைபெறும் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. ரூ.1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க.வின் மானம் காற்றில் பறந்துகொண்டியிருக்கிறது. தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டு அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாது கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றமும் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது. அதோடு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழிக்கு தொடர்பு உள்ளது என்றும் கூறிவிட்டது. அதோடுமட்டுமல்லாது தற்போது தி.மு.க. அமைச்சர் தயாநிதி மாறனும் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. ஏர்செல் நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்ததாகவும் சன் டி.வியில் முதலீடு செய்ய வற்புறுத்தியகாவும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அதனால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இல்லாவிட்டால் வருகின்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்தவிடமாட்டோம் என்றும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இதனால் ஆத்திரமடைந்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி காங்கிரஸ் மீது கடும் கோபம் கொண்டியிருப்பதாக தெரிகிறது. டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனிமொழியை பார்க்க சென்ற சோனியாவை சந்தித்து பேசவில்லை. ஒருவேளை சோனியா காந்தி புறக்கணித்துவிட்டாரோ என்னமோ தெரியவில்லை.  கனிமொழிக்கு டெல்லி ஐகோர்ட்டிலும்  ஜாமீன் கிடைக்காது என்று கருதிய கருணாநிதி, பெரியார் பிறந்த தினத்தன்று கூடா நட்பு கேடாய் முடியும் என்றார். அதாவது காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கக்கூடாது. இனிமேலும் வைக்கக்கடாது என்ற அர்த்தத்தில் கூறியுள்ளார் என்பது உண்மையாகும். மேலும் கனிமொழிக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கவில்லை என்று தெரிந்ததும் தி.மு.க. உயர்நிலைக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெறும் என்று கருணாநிதி அறிவித்தார். இந்த கூட்டத்தில் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கருணாநிதி உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

கூட்டத்தில் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து தி.மு.க. அமைச்சர்கள் வெளியேற முடிவு எடுக்கலாம் என்று தெரிகிறது. அப்படி முடிவு எடுத்தால் ஆ.ராசா மாதிரி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது மாதிரி, தயாநிதி மாறனுக்கும் அந்தகதி ஏற்படாமல் தவிர்க்கப்படலாம் என்றும் தெரிகிறது. மத்தியில் உள்ள தி.மு.க. அமைச்சர்கள் எம்.கே. அழகிரி,எஸ்.எஸ். பழனிமாணிக்கம், காந்தி செல்வம், டி.நெப்போலியன், எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோரும் மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறுவார்கள் என்று தெரிகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க. வும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் முக்கிய கூட்டணி கட்சிகளாக உள்ளன. இந்த இரண்டு கட்சிகளுக்கும் தலா 18 எம்.பி.க்கள் உள்ளனர்.

காங்கிரஸ் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்துவதற்காக மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. வெளியேறினாலும் அரசுக்கு ஆதரவு தொடரும் என்று காங்கிரசார் பேசிக்கொள்கிறார்கள். அதேசமயத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகினால் மத்திய அரசின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதையும் காங்கிரசார் ஒப்புக்கொள்வதாக தெரிகிறது. தி.மு.க.வை கூட்டணியில் இருந்து விலக்கினால் நாங்கள் ஆதரவு கொடுக்கத்தயார் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா ஏற்கனவே கூறியுள்ளார். அதோடுமட்டுமல்லாமல் வேறு கட்சிகளின் ஆதரவையும் பெற்றுத்தருவதாக உறுதி அளித்திருந்தார். அ.தி.மு.க. வில் தற்போது லோக்சபை எம்.பி.க்கள் 9 பேர் உள்ளனர். அடுத்தவாரம் முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்ல உள்ளார். அப்போது ஏற்கனவே சொன்ன உறுதிமொழியை மீண்டும் கூறுவார் என்று தெரிகிறது. காங்கிரஸ் மேலிடமும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புகிறது. ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றவுடன் அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தோடு தேனீர் விருந்திலும் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்தார். மேலும் தமிழக கவர்னராக இருக்கும் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலம் வரும் 20-ம் தேதியுடன் முடிவுடைகிறது. அதன்பின்னர் மார்க்கெரட் ஆல்வாவை கவர்னராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. அ.தி.மு.க.வுடன் உறவு வைத்துக்கொள்வதற்காகவே மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் என்றும் பேசப்படுகிறது. 

இதற்கிடையில் தி.மு.க. கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படலாம் என்ற சஞசலத்தில் காங்கிரஸ் இருக்கிறது. தி.மு.க. உயர்மட்ட கூட்டம் கூறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், தி.மு.க. மேல்மட்ட கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு தகுந்தவாறு எங்களது பதில் நடவடிக்கை இருக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்