முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி ஊழல் விசாரணைக்குழு இன்று லண்டன் பயணம்

சனிக்கிழமை, 11 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன் - 12 - ரூ. 1.76 லட்சம்கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்திவரும் நான்கு அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழு இன்று லண்டன் புறப்பட்டு செல்கிறது. 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்கள், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் உள்பட 13 பேர் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆதாயம் அடைந்த தனி நபர்கள், கம்பெனிகள், பல்வேறு வெளிநாடுகளில் ரகசியமாக பணத்தை குவித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வரி இல்லாத நாடுகளில் இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பணம் எந்தெந்த நாடுகளில், எந்தெந்த வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக 4 பேர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்று இன்று லண்டன் புறப்பட்டு செல்கிறது. இந்த குழு லண்டன் செல்வதற்கான அனுமதியை மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. இக்குழுவினர் இங்கிலாந்து மட்டுமல்லாமல் அதன் அண்டை நாடுகள் சிலவற்றிலும் தங்களது விசாரணையை மேற்கொள்வார்கள். இந்த குழுவில் மத்திய அமலாக்க பிரிவைச் சேர்ந்த 2 அதிகாரிகளும், மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.)யைச் சேர்ந்த  2 அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் சுமார் ஒரு வார காலம் லண்டனில் தங்கியிருந்து தங்களது விசாரணையை நடத்துவார்கள். இவர்களுக்கு லண்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். 

2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆதாயம் அடைந்தவர்கள் பதுக்கி வைத்துள்ள பணம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமலாக்க பிரிவைச் சேர்ந்த வேறு ஒரு குழு சைப்ரஸ், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்லவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த குழுவும் அநேகமாக அடுத்த வாரம் புறப்பட்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லண்டன் செல்லும் 4 அதிகாரிகளைக் கொண்ட குழு, மேன் தீவு, பிரிட்டீஷ் வர்ஜின் தீவு ஆகிய இடங்களுக்கும் சென்று அங்குள்ள வங்கிகளில் இந்தியர்கள் மற்றும் இந்திய கம்பெனிகள் பதுக்கி வைத்துள்ள பணம் குறித்தும் ஆய்வு செய்யும். பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள விபரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இங்கிலாந்து வரும் விசாரணை அதிகாரிகளுக்கு தேவையான விபரங்களை அளிக்க வேண்டும் என்பது குறித்த கடிதத்தை இங்கிலாந்து அரசுக்கு இந்திய அரசு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இந்திய விசாரணை குழுவினருடன் ஒத்துழைப்பதற்கு இங்கிலாந்து அரசு ஏற்கனவே தனது சம்மதத்தை அளித்துள்ளது. 

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆதாயம் அடைந்த கம்பெனிகளின் பின்னணியில் யார் யார்? எந்தெந்த வழிகளில்? எவ்வளவு பணம் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பது போன்ற விபரங்களை இந்த விசாரணைக் குழு அதிகாரிகள் கண்டறிவார்கள். இந்திய கம்பெனிகளுடன் யார் யாருக்கு நிதித் தொடர்புகள் உள்ளன என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். 

மொரீஷியஸ் நாட்டிற்கு ஏற்கனவே ஒரு அமலாக்க பிரிவு குழு விஜயம் செய்துள்ளது. அந்த குழுவின் அறிக்கைக்காகவும் மத்திய அமலாக்க பிரிவு இயக்குனரகம் காத்திருக்கிறது. இப்படி கிடைக்கும் விபரங்கள் அனைத்தையும் இந்திய புலனாய்வு ஏஜென்சிகளுக்கு அமலாக்க பிரிவு அனுப்பி வைக்கும் என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்