முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூன்- .13 - தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு முதல் முறையாக தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று 2 நாள் பயணமாக தலைநகர் டெல்லிக்கு பயணமாகிறார். இந்த பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக கருதப்படுகிறது. தி.மு.க. - காங்கிரஸ் இடையே கசப்புணர்வு தோன்றி விட்ட நிலையில் ஜெயலலிதா இன்று டெல்லிக்கு செல்வதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 13 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. பிறகு மே 13 ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 147 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் 203 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. 29 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. 21 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்ததோடு எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து விட்டது. இதன் காரணமாக தமிழக சட்டசபையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். அவரது கட்சிக்கு இப்போது அங்கீகாரமும் கிடைத்து விட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு மூன்றாவது முறையாக தமிழகத்தில் பதவியேற்றது. அவருடன் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற அன்றே கோட்டைக்கு சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா 20 கிலோ இலவச அரிசி, ஏழைப் பெண்களுக்கு 4 கிராம் தாலிக்கு தங்கம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட 7 திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதன் பிறகு பல முறை அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரும் நடந்து முடிந்துள்ளது. இந்த சூழ்நிலையில்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று 2 நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு அதாவது முதல்வராக பதவியேற்ற பிறகு ஜெயலலிதா டெல்லி செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி செல்லும் ஜெயலலிதா அங்கு பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கிறார்.
இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் தமிழக சட்டசபையில் சமீபத்தில்தான் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழ்நிலையில் முதல்வர் ஜெயலிலதா டெல்லியில் பிரதமரை சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேசவுள்ளார். மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பிரதமருடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்துகிறார். சட்டசபை தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.  எனவே டெல்லியில் முதல்வர் ஜெயலலிதா காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் சந்திக்கக்கூடும்.
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க. மத்திய மந்திரியாக இருந்த ஆ. ராசா கைது செய்யப்பட்டார். அதன் பிறகு கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி லஞ்சப் பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக கருணாநிதி மகள் கனிமொழியும் கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் இருக்கிறார். இவரது ஜாமீன் மனு டெல்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கோரி கனிமொழி மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த ஜாமீன் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. கனிமொழி கைது செய்யப்பட்ட விஷயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் அப்செட்டாகி உள்ளார்.
காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக் கொள்ளவும் அவர் தயாராக இருக்கிறார். ஆனால் சில தி.மு.க. தலைவர்கள் அதை விரும்பவில்லையாம். காரணம், ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு தி.மு.க. மத்திய அமைச்சர்கள் பதவி விலகும் பட்சத்தில் தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு, மு.க. அழகிரி மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாம் என்று சில தி.மு.க தலைவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த அச்சம் தி.மு.க. உயர்நிலைக் கூட்டத்தில் கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டதாம். அதனால்தான் மத்திய அமைச்சர்கள் விலகும் முடிவு ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இருந்தாலும், காங்கிரஸ் மீது கருணாநிதி கடும் கோபத்தில் இருக்கிறாராம்.
இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில்தான் தமிழக முதல்வர் ஜெயலிலதா டெல்லிக்கு செல்கிறார். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்த நிலையில் ஜெயலலிதா டெல்லிக்கு செல்கிறார். ஆகவே அவரது இந்த 2 நாள் அரசியல் பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அ.தி.மு.க. காங்கிரஸ் இடையே கடந்த 10 ஆண்டு காலமாக உறவு இல்லாமல் இருந்து வந்தது. காங்கிரசுக்கு அ.தி.மு.க தலைமை பல முறை நேசக்கரம் நீட்டியும் அதை காங்கிரஸ் கட்சி பொருட்படுத்தாமல் இருந்தது. ஆனால் இப்போது அ.தி.மு.க.வின் அருமை அவர்களுக்கு புரிந்து விட்டது போலும். ஆகவே, அ.தி.மு.க.வுடன் அவர்களாகவே வலிய வந்து நேசக்கரம் நீட்டினாலும் ஆச்சரியமில்லை. எது எப்படியோ, ஜெயலலிதா டெல்லி சென்று வந்த பிறகு சில மாறுதல் காட்சிகள் கண்ணுக்குத் தெரியும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்