முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல்

சனிக்கிழமை, 26 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,பிப்.27- பாராளுமன்ற லோக்சபையில் நாளை (28-ம் தேதி) திங்களன்று 2011-2012-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் வருவதால் புதிய வரிகள் இருக்காது. மேலும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தொகையும் ரூ. 2 லட்சமாக உயரக்கூடும் என தெரிகிறது. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஜே.பி.சி. எனப்படும் கூட்டுக்குழு அமைக்க மத்திய அரசு சம்மதித்த காரணத்தால் இந்த கூட்டத்தொடர் அமைதியாகவே நடந்து வருகிறது. முதல் நாளன்று மரபுப்படி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்,பாராளுமன்ற இருசபைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கறுப்பு பணம் ஒழிக்கப்படும். விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும் போன்ற உறுதிகளை அளித்தார். பின்னர் நேற்றுமுன்தினம் இந்தாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதிலும் பயணிகள் கட்டணமோ அல்லது சரக்கு கட்டணமோ உயர்த்தப்படவில்லை. இருப்பினும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் மம்தா பானர்ஜி அறிவித்தார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மம்தாவின் பட்ஜெட் மேற்குவங்கத்தின் தேர்தல் அறிக்கை போல் இருக்கிறது என்று பாரதிய ஜனதா கிண்டல் அடித்துள்ளது. இந்த பட்ஜெட்,சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் மட்டும் இது வளர்ச்சிக்குரிய பட்ஜெட் என்று கருத்து தெரிவித்துள்ளது. பொருளாதார ஆய்வு அறிக்கையும் நேற்றுமுன்தினம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 

இந்தநிலையில் நாளை பாராளுமன்ற லோக்சபையில் இந்தாண்டுக்கான பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை வழக்கும்போல் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். இந்தாண்டில் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், புதுவை உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. அதன் காரணமாக இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் இருக்காது என்றும் அப்படி இருந்தாலும் அதிகமாக இருக்காது என்று பரவலாக நம்பப்படுகிறது. மேலும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு தற்போது ரூ. 1.5 லட்சமாக இருக்கிறது. இந்த உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஒரு தேர்தல் பட்ஜெட்டாகவே இருக்கும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு அதன் மீது விவாதம் நடைபெறும். சுமார் 2 மாத காலம் இந்த கூட்டத்தொடர் நடைபெறும். சட்டசபை தேர்தல்கள் வருவதால் கூட்டத்தொடரின் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்