முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை - இலங்கையை வென்றது பாகிஸ்தான்

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

கொழும்பு, பிப்.28 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் அணி இலங்கையை வென்றது. 10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-வது லீக் போட்டி,   ஏ பிரிவில் உள்ள அணிகளான பாகிஸ்தான்,  இலங்கை அணிகள் இடையே நடந்தது.  பகலிரவு ஆட்டமாக இந்த போட்டி இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு அணிகளும் தங்கள் முதல் லீக் போட்டிகளில் வெற்றிபெற்ற நிலையில், இந்த இரண்டாவது லீக் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக கருதப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக அஹமது ஷேஸாத் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் களமிறங்கினர். துவக்க வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

பாக். அணியின் ஸ்கோர் 28 ஐ எட்டியபோது 13 ரன்களை எடுத்திருந்த  அஹமது ஷேஸாத், வேகப்பந்துவீச்சாளர் பெரைராவின் பந்தில் விக்கெட் கீப்பர் சங்கக்காராவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கம்ரான் அக்மல், முகமது ஹபீசுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு அடித்து விளையாடியது. அணியின் எண்ணிக்கை 13.1 ஓவரில் 76 ரன்களை எட்டியபோது மற்றொரு துவக்க வீரர் ஹபீசும் 32 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாக்கப்பட்டார். அடுத்ததாக அனுபவ வீரர் யூனிஸ்கான் களமிறங்கினார். 20.2 ஓவர்களில் பாக். அணி 105 ரன்களை எடுத்திருந்தபோது 39 ரன்களை எடுத்திருந்த கம்ரான் அக்மல், ஹெராத்தின் வேகப்பந்தில் சங்கக்காராவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து மிஸ்பா உல் ஹக், யூனிஸ்கானுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரின்  பார்ட்னர்ஷிப் பாக். அணி சிறப்பான ஸ்கோரை எட்ட உதவியது. இவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப்பாக 100 ரன்களை கடந்தனர். அணியின் எண்ணிக்கை 213 ஐ அடைந்தபோது 72 ரன்களை எடுத்திருந்த யூனிஸ்கான், ஹெராத்தின் வேகத்தில் ஜெயவர்த்தனேவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். யூனிஸ்கானுக்கு பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தாலும் மிஸ்பா உல் ஹக் மட்டும் தொடர்ந்து மிகச் சிறப்பாக விளையாடினார். இதன் காரணமாக பாக். அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களை எடுத்தது. மிஸ்பா உல் ஹக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 91 பந்துகளில் 83 ரன்களை அடித்தார். இலங்கை தரப்பில் பெரைரா மற்றும் ஹெராத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முரளீதரன் மற்றும் மேத்யூஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 278 ரன்களை எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற இலக்கு இலங்கை அணிக்கு வைக்கப்பட்டது. 

சற்று கூடுதலான இலக்கை சேஸ் செய்த இலங்கை அணியின் துவக்க வீரர்கள் தில்சான் மற்றும் உபுல் தரங்கா ஆகியோர் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் சேர்ந்து 76 ரன்களை சேர்த்த நிலையில் முதல் விக்கெட்டாக தரங்கா, முகமது ஹபீசின் பந்துவீச்சில் ஷாகித் அப்ரிடியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்த சில ஓவர்களிலேயே துவக்க வீரர் தில்சன் 41 ரன்கள் எடுத்த நிலையில், பாக். கேப்டன் அப்ரிடியின் சுழல்பந்தில்    

 கிளீன்போல்டானார். அடுத்து ஜெயவர்த்தனே 2 ரன்களே எடுத்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தரின் பந்தில் போல்டாகி அதிர்ச்சியளித்தார். அடுத்து இறங்கிய சமரவீரா 1 ரன்னை மட்டும் எடுத்து அப்ரிடியின் பந்தில் விக்கெட் கீப்பர் அக்மலால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 21.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களாக இருந்தது.   ஜெயவர்த்தனே மற்றும் சமரவீராவின் விக்கெட்டுகள்  ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து கேப்டன் சங்கக்காரா மற்றும் சமர சில்வா ஜோடி இலங்கை அணியை ஓரளவு கெளரவமான ஸ்கோருக்கு அழைத்துச் சென்றது. அணியின் எண்ணிக்கை 169 ஐ எட்டியபோது சங்கக்காரா, அப்ரிடியின் சுழல்பந்தில் அஹமது ஷேஸாத்தால் கேட்ச்  பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதன் பிறகு சமரசில்வா மட்டுமே சிறப்பாக விளையாடினார். அணியின் எண்ணிக்கை 233 ஐ எட்டியபோது, 57 ரன்களை எடுத்திருந்த சமரசில்வா, அப்துர் ரெஹ்மானின் பந்தில் கீப்பர் அக்மலால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரை அடுத்து குலசேகரா சில அதிரடி ஷாட்களை ஆடினாலும் அது இலங்கை அணியின் வெற்றிக்கு உதவவில்லை. கடைசி ஓவரில் 13 ரன்களை எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற நிலையில் இறுதி ஓவரை உமர்குல் வீசினார். இந்த ஓவரில் குலசேகராவின் விக்கெட்டும் வீழ்ந்தது. இதையடுத்து அந்த ஓவரில் 2 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 50 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. ஹெராத் 4 ரன்களுடனும், முரளீதரன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். பாக். தரப்பில் கேப்டன் அப்ரிடி மிகச் சிறப்பாக பந்துவீசி 34 ரன்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்தர் 2 விக்கெட்டுகளையும், உமர்குல், ஹபீஸ், ரெஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அப்ரிடி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ள இலங்கை அணி அதன் சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது அந்நாட்டு ரசிகர்களை பெரும் சோகத்தில்  ஆழ்த்தியது. பாக். அணி இரண்டாவது வெற்றியின் மூலம் 4 புள்ளிகளை பெற்றுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்