முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எரிபொருள் விலை உயர்வு கேரள சட்டசபையில் இ.கம்யூ வெளிநடப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜூன்.- 28 - எரிபொருள் விலை உயர்வை மத்திய அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் இருந்து இடது கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி கட்சிகள் நேற்று வெளிநடப்பு செய்தன. டீசல்,சமையல் எரிவாயு,மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருள்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளன. இதுகுறித்து இடது கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கட்சிகள் நேற்று சட்டசபையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. இதற்கு சபாநாயகர் ஜி.கார்த்திகேயன் அனுமதி மறுத்துவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர். கேரள மாநிலத்தில் டீசலுக்கு விதிக்கப்படும் வரி குறைக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்தபோதும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஒத்திவைப்பு தீர்மானத்திற்கான நோட்டீஸை முன்னாள் நிதி அமைச்சர் டி.எம். தாமஸ் இசாக் கொண்டு வந்தார். இதற்கு முதல்வர் சாண்டி பதில் அளித்து கூறியதாவது:-

டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியபோதிலும் மாநில அரசானது அதற்கு விதிக்கப்படும் வரியை குறைத்துள்ளது. இதன்மூலம் ஒரு லிட்டர் டீசலுக்கு 75 பைசா குறையும். இதனால் ஆண்டுக்கு ரூ.142 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளபோதிலும் நுகர்வோர்களை பாதுகாக்க மத்திய அரசு இந்த நல்ல நடவடிக்கையை எடுத்துள்ளது. எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதற்கான காரணத்தை மத்திய அரசு ஏற்கனவே விளக்கியுள்ளது. இவ்வாறு சாண்டி கூறினார்.

முன்னதாக ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸை கொடுத்து முன்னாள் அமைச்சர் இசாக் கூறியதாவது:-

 டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையை மத்திய அரசு உயர்த்தி சர்வதேச கம்பெனிகள் ஆதாயம் பெற மத்திய அரசு உதவி வருகிறது. இதனால் கேரளாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். இதைத்தடுக்க மாநிலத்தில் பொதுவிநியோக முறையை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு இசாக் பேசினார். பின்னர் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் பேசுகையில், விலை உயர்வால் மாநில மக்கள் ஏற்கனவே பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். தற்போது எரிபொருள் விலையை மீண்டும் உயர்த்தி இருப்பதால் மக்கள் மேலும் கஷ்டப்படுவார்கள் என்றார். இதனையொட்டி இடதுசாரி உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்