முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம்-புதுவை தேர்தல் தேதி சில நாளில் அறிவிப்பு

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

புதுடெல்லி,பிப்.28 - தமிழகம்,புதுவை உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. தமிழகம், புதுவை ஆகிய மாநிலங்களில் நடப்பு சட்டசபை காலம் வருகின்ற மே மாதத்துடன் முடிவடைகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் மே மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். மேலும் அசாம், மேற்குவங்காளம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் நடப்பு சட்டசபை காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. அதனால் இந்த 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டிய கட்டாய நிலையில் தேர்தல் கமிஷன் உள்ளது. 

தேர்தல் நடக்கவுள்ளதையொட்டி தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அ.தி.மு.க. தலைமையில் ஏற்கனவே ம.திமு.க., இடது கம்யூனிஸ்ட்,வலது கம்யூனிஸ்ட், புதிய தமிழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், பார்வர்டு பிளாக் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளன. மேலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையில் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. கட்சியும் சேர்ந்துவிட்டது. அதனால் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி ஒரு வெற்றி கூட்டணியாக அமைந்துவிட்டது. அதேசமயத்தில் 2 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் சிக்கி தவிக்கும் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்திருந்தாலும் மக்களிடையே போதிய ஆதரவு இருக்காது என்று தெரிகிறது. மேலும் தி.மு.க.தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் தொகுதி பங்கீடு பிரச்சினையில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது. 

இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் மறைமுகமாக தாக்கி பேசியும் குறை கூறியும் வருகிறார்கள். அதனால் இந்த இரண்டு கட்சிகளுக்கிடையே கூட்டணி முறிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

இந்தநிலையில் தமிழ்நாடு, புதுவை, கேரளா,மேற்குவங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதியை இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் கமிஷன் அறிவிக்கலாம் என்று தெரிகிறது. தமிழ்நாடு,புதுவை ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஒரே கட்ட தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. கேரளா, அசாம் ஆகிய மாநிலங்கள் மலைபாங்கான பகுதிகளாக இருப்பதாலும் மேற்குவங்காளம் பெரிய மாநிலமாகவும், மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் இருப்பதாலும் அந்த மாநிலங்களில் பல கட்ட தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்