முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை: இங்கிலாந்து-இந்தியா ஆட்டம் டிராவானது

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

பெங்களூரு, பிப்.28 - இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பரபரப்பான லீக் போட்டி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி டையில் முடிவடைந்தது. 

10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பி பிரிவு லீக் போட்டி ஒன்றில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இரண்டு அணிகளுமே சம பலம் கொண்ட அணிகளாக திகழ்வதால் இந்த போட்டி ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக சச்சின், வீரேந்திர சேவாக் இருவரும் களமிறங்கினர். சேவாக் துவக்கத்திலேயே ஆன்டர்சன் பந்தில் இரண்டு வாய்ப்புகளை கொடுத்தார். அதன் பிறகு அதிரடி ஆட்டத்தை துவக்கினார். ஆனால் அவரது வழக்கமான பலவீன ஷாட்டினாலேயே தேவையில்லாமல் ப்ரேஸ்னன் பந்தை தொட்டுவிட, கீப்பர் ப்ரையர் ஒரு கையால்  அபாரமான கேட்சை பிடித்து சேவாக்கை வெளியேற்றினார். சேவாக் 35 ரன்களை எடுத்தார். அப்போது இந்திய அணி 46 ரன்களை எடுத்திருந்தது.  இதன் பிறகு காம்பீர், டெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் அதிரடியாக ரன் எண்ணிக்கையை உயர்த்தினர். அணியின் எண்ணிக்கை 180 க்கு உயர்ந்தபோது 51 ரன்கள் எடுத்திருந்த காம்பீர், ஸ்வானின் சுழல்பந்தில் அவுட்டானார். அடுத்ததாக யுவராஜ் களமிறங்கினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் டெண்டுல்கர் தனது 47-வது ஒரு நாள் சதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து 6  உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள சச்சினுக்கு உலகக் கோப்பையில் இது 5 வது சதமாகும். அணியின் எண்ணிக்கை 236 ஐ எட்டியபோது சச்சின், ஆன்டர்சனின் பந்தில் யார்டியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 120. 115 பந்துகளில் இந்த ரன்களை பெற்றார் சச்சின். இதில் 5 சிக்சர்களும், 10 பவுண்டரிகளையும் அடித்திருந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய யுவராஜ் மற்றும் தோனி, ரன் எண்ணிகையை 300 க்கு உயர்த்தினர். அணியின் எண்ணிக்கை 305 ஐ அடைந்தபோது அரை சதம் அடித்திருந்த யுவராஜ் சிங், யார்டியின் பந்துவீச்சில் இயான் பெல்லால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதே ரன்னிலேயே கேப்டன் தோனியும் ப்ரேஸ்னன் பந்தில் அவுட்டானார். தோனி  எடுத்த ரன்கள் 31. யூசுப் பதான் 8 பந்துகளில் 14 ரன்களையும், விராட் கோஹ்லி 5 பந்துகளில் 8 ரன்களையும், ஹர்பஜன் சிங் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டானார்கள். ப்ரேஸ்னன் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்த இறுதி கட்டத்தில் இந்தியாவின் ரன் குவிப்பு வேகம் குறைந்தது. இதனால் 49.5 ஓவர்களில்  இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து   338 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ப்ரேஸ்னன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆன்டர்சன், ஸ்வான், யார்டி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

339 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை விரட்ட களமிறங்கியது இங்கிலாந்து. துவக்க வீரர்களாக பீட்டர்சன் மற்றும் ஸ்ட்ராஸ் ஆகியோர் இறங்கினர்.  இவர்கள் அதிரடி துவக்கத்தை கொடுத்தனர். அணியின் எண்ணிக்கை 68 ஐ எட்டியபோது 31 ரன்கள் எடுத்திருந்த பீட்டர்சன், முனாப் பட்டேலின் பந்தில் அவராலேயே கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரை அடுத்து டிராட் கேப்டனுடன் ஜோடி சேர்ந்தார். டிராட் 16 ரன்கள் எடுத்த நிலையில் ப்யூஸ் சாவ்லாவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு இயான் பெல்லும், ஸ்ட்ராசும் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். சிக்சர்களும், பவுண்டரிகளும் பறந்தன. இந்திய பவுலர்கள் செய்வதறியாது திகைத்தனர். எளிய வெற்றியை நோக்கி இங்கிலாந்து பயணம் செய்தது. இதில் பல கேட்ச் வாய்ப்புகளையும் இந்திய வீரர்கள் வீணாக்கினர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் எண்ணிக்கை 281 ஆக இருந்தபோது, 43 வது ஓவரை வீசவந்த ஜாஹீர்கான், 69 ரன்கள் எடுத்திருந்த இயான் பெல் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த கேட்சை பிடித்தவர் விராட் கோஹ்லி. இதையடுத்து அடுத்த பந்திலேயே அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த ஸ்ட்ராசையும் 158 ரன்களில்  வீழ்த்தினார் ஜாஹீர். இவருடைய இந்த ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்ததாக களமிறங்கிய கோலிங்வுட்டையும், ஜாஹீர்கான் கிளீன் போல்டாக்க ஆட்டம் இந்தியாவுக்கு சாதகமாக திரும்பியது. இறுதியாக களமிறங்கிய இங்கிலாந்து பவுலர்களை அவுட்டாக்க மீண்டும் இந்திய பவுலர்கள் திணறினர். கடைசி ஓவரில் 14 ரன்களை எடுக்க வேண்டிய நிலையில் பந்துவீச வந்த முனாப் பட்டேல் அந்த ஓவரில் 13 ரன்களை விட்டுத்தர இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 338 ரன்களை எடுத்தது. இதனால்  ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி டையில் முடிந்தது. இந்திய தரப்பில் ஜாஹீர் கான் 3 விக்கெட்டுகளையும், முனாப் பட்டேல், ப்பூஸ் சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன்சிங் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 158 ரன்கள் எடுத்த ஸ்ட்ராஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கு தலா 1 புள்ளி கிடைத்தது. இரண்டு ஆட்டங்களின் முடிவில் இவ்விரு அணிகளும் 3 புள்ளிகளை பெற்றுள்ளன

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்